டெல்லியில் பிப்ரவரி 5ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை எட்டாம் தேதி நடைபெறும். ஆளும் ஆம் ஆத்மி பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே இந்த தேர்தலில் கடுமையான மும்முறை போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் வெற்றியை கருதி கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து வருகின்றன.
ஆளும் ஆம் ஆத்மி கட்சியை பொறுத்தவரை மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர முடியாமல் இருப்பதற்கு பஸ் கட்டணமும் முக்கிய காரணமாக இருப்பதால் முதல் கட்டமாக மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு அந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த தேர்தலில் மீண்டும் தங்கள் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், இதேபோல் மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கெஜ்ரிவால் இன்று அறிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை! ஆயுஷ் மான் பாரத் திட்டத்தில் டெல்லி அரசு சேர முடியாது
டெல்லியில் மெட்ரோ ரயில் சேவையை மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து நடத்தி வருகின்றன. மாணவர்களுக்கு இந்த ரயில் சேவையில் பாதி கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்; அதாவது 50% கட்டண சலுகை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் ஒன்றையும் அவர் எழுதியிருக்கிறார். "இது அரசியல் அல்ல; பொதுமக்கள் நலம் சார்ந்தது; எனவே பிரதமர் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்வார் என்று நம்புவதாகவும்" கெஜ்ரிவால் கூறியிருக்கிறார்.
இது குறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இந்த கட்டண சலுகையால் ஏற்படும் கூடுதல் செலவை இரு அரசுகளும் சமமாக பங்கிட்டு கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

பெண்களைப் பொறுத்தவரை தற்போதைய ஆம் ஆத்மி அரசு 'ஏசி' உள்ளிட்ட அனைத்து பஸ்களிலும் இலவசமாக பயணம் செய்ய ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து உள்ளது.
டெல்லி தேர்தலில் மொத்தம் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. பாரதிய ஜனதா கட்சி 59 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

கெஜ்ரிவால் போட்டியிடும் புதுடெல்லி தொகுதியில் பெரும்பான்மையான கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் மெட்ரோ ரயில் சேவையைத் தான் நம்பியுள்ளனர். எனவே அவர்களின் நிதிச் சுமையை குறைக்கும் வகையில் கட்டண சலுகை வழங்க வேண்டும் என்பதில் கெஜ்ரிவால் உறுதியாக இருக்கிறார்.
பாரதிய ஜனதா கட்சியும் இன்று தேர்தலில் வாக்குறுதி வழங்குவதாக இருந்தது. அதற்கு முன்பாகவே ரயில் கட்டண சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பிரதமருக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதி இருப்பது அவருடைய சமயோசித புத்தியை வெளிப்படுத்தி இருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: "பா.ஜ.க. பதிவை 'எக்ஸ்' வலைத் தளத்தில் ரகசியமாக பகிர்ந்த டெல்லி தேர்தல் அதிகாரி" : ஆம் ஆத்மி குற்றச்சாட்டு