பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் சேர்ந்தால், தேசியக் கல்விக் கொள்கையையும், மும்மொழி கொள்கையையும் ஏற்றுக் கொண்டதாக ஆகிவிடும் என்பதனால் தமிழக அரசு இதுவரை அந்தத் திட்டத்தில் இணையவில்லை. நடப்பாண்டு நிதியை வழங்கிட தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும் வரை நிதி விடுவிக்கப்பட மாட்டாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்தது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
மும்மொழி கொள்கைக்கு பாஜகவில் எழுந்த எதிர்ப்பு:
இந்நிலையில் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வின் கலை, கலாச்சாரப் பிரிவு மாநில செயலாளர் ரஞ்சனா நாச்சியார் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். மத்திய அரசு தமிழகத்தை மாற்றத்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில், பாஜகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: பஸ்ஸில் மாணவர்களை வெளுத்தெடுத்த ரஞ்சனா பாஜகவில் இருந்து விலகல்.! ஹிந்திக்கு கடும் எதிர்ப்பு

பாஜகவில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார் அடுத்ததாக திமுகவில் இணைவாரா?, தவெகவில் ஐக்கியமாவாரா? என விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ரஞ்சனா நாச்சியார் செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளார். அப்போது பேசிய அவர், நான் பாஜகவில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தேன். எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகள் எல்லாவற்றையுமே நான் இதுவரைக்கும் சிறப்பாக செஞ்சிருக்கேன். அது எல்லாருக்குமே தெரியும். இன்னைக்கு நான் வந்து இந்த விலகலை அறிவிச்சிருக்கேன். அதுக்கு நிறைய காரணங்கள் இருக்கு, அதுல சில காரணங்கள் நான் சொல்ல முடியும் சில காரணங்கள் சொல்ல முடியாது.
விலகியதற்கான காரணம் என்ன?
அதுல ஒரு முக்கியமான காரணமா இந்த மும்மொழிக் கொள்கை எதிர்ப்புதான். மூன்று மொழிகள் கற்கணும் அப்படிங்கறது வந்து ஹிந்தியா இல்ல, ஹிந்தி இல்லாமல் எந்த மொழி வேணாலும் கற்கலாம் அப்படின்னு தான் பாஜாக இன்னைக்கு வரைக்கும் அறிவுறுத்துறாங்க. பள்ளிக்கூடங்கள்ல பார்த்தீங்கன்னா அதுக்கான ஆப்பர்சுனிட்டி கிடையாது. இப்ப ஹிந்திக்கு டீச்சர் இருப்பாங்க மராட்டி கத்துக்கணும் மலையாளம் கத்துக்கணும்னா அந்த மொழிகளுக்கு ஆசிரியர்கள் கிடையாது.

ஒரு கடையில வந்து வாங்க வாங்க சாப்பிட வாங்கன்னு கூப்பிட்டுட்டு, இங்க இந்த ரெண்டு சாப்பாடுதான் இருக்கு சாப்பிடுங்க அப்படின்னு சொல்லக்கூடாது. உள்ள போய் உட்கார்ந்ததுக்கு அப்புறமா இருக்கறதை சாப்பிட்டுட்டு வருவோம் இல்லையா, அந்த மாதிரி ஒரு நிலைமை வந்து கல்வியில இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன். இங்க மொழிங்கிறது வந்து யார் வேணாலும் கத்துக்கலாம். எந்த மொழியை வேணாலும் கத்துக்கலாம், மொழிக்கு எதிர்ப்பு கிடையாது, இந்திக்கு எதிர்ப்பும் கிடையாது. இந்தியும் கத்துக்கலாம், தெலுங்கு கத்துக்கலாம், மலையாளமும் கத்துக்கலாம், இப்படி எந்த மொழியை வேணாலும் கத்துக்கலாம்.

ஆனால் ”எம்மொழி காப்போம் எம்மொழியையும் கற்போம்” என்ற ஒரு கொள்கையை தான் நம்ம கொண்டு போகணும்னு நான் நினைக்கிறேன். ஏன்னா ஒரு மொழியை வந்து நம்ம கொண்டு வரணும் இன்னைக்கு வந்து ஆதிக்கம் பார்த்தீங்கன்னு சொன்னா ஹிந்திக்காரங்க நம்ம நாட்டுல வேலை பாக்குறவங்க அதிகமாயிட்டாங்க அண்ட் அதுல பாசிட்டிவும் இருக்கு நெகட்டிவும் இருக்கு அதுக்காக அவங்க எல்லாம் வந்து நம்ம ஊர்ல வேலை பாக்க கூடாதுன்னு நினைக்க வேணாம். அந்த வேலைக்காக அந்த மொழியைக் கற்று கொள்கிறார்கள். அது தவறில்லை. ஆனா இந்த விஷயத்தை ஏற்காவிட்டால் உங்களுக்கான நிதியைக் கொடுக்க மாட்டோம் என ஆணவத்துடனும், அதிகாரத்துடனும் சொல்லக்கூடாது. நான் சொல்றதை நீங்க செய்யலைன்னா இதை கட் பண்ணிருவேன் அதை கட் பண்ணிருவேன்னு சொல்றது எனக்கு உடன்பாடு இல்லை.
அடுத்து எந்த கட்சியில் இணைகிறார்?

இதனிடையே செய்தியாளர்கள் அவரிடம், உங்களுடைய விலகல் அறிக்கையில் திமுகவிற்கு ஆதரவான கருத்துக்கள் உள்ளன. அடுத்து நீங்கள் எந்த கட்சியில் இணையப்போகிறீர்கள் திமுகவா அல்லது தவெகவா என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், திமுக, தவெக, அதிமுக எந்த கட்சின்னு இல்லைங்க. எந்த கட்சியில இருந்தாலும் நம்ம பயணிக்க போறது மக்கள் பணிதான் பார்ப்போம். நான் விரைவில் அதற்கான அறிவிப்பையும் வெளியிடுவேன். எனக்கு மக்கள் மேல, மொழி மேல, என் இனம் மேல எனக்கு எப்போதும் அக்கறை உண்டு. எனவே நிச்சயமாக அரசியலில் தொடர்வேன். அப்போது மீண்டும் செய்தியாளர் தவெகவில் இணையப்போவதாக பேச்சுகள் அடிபடுகிறது எனக்கேட்டார். அதற்கு ரஞ்சனா நாச்சியார், கட்டாயம் ஊடகங்களுக்கு முறையாக அறிவிக்காமல் எதையும் செய்யமாட்டோன் எனக்கூறினார்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு: தமிழகத்தில் 8 தொகுதிகள் பறிபோகும் அபாயம்..!