சென்னையில் நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவில் மெட்ராஸ் ஐஐடி இயக்குநர் காமகோடி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘என் தந்தை ஜுரத்தில் இருந்தபோது, சன்னியாசி ஒருவர் வந்தார். கோமூத்திரத்தைக் (கோமியம்) குடிக்கச் சொன்னார். என் தந்தை குடித்ததும் 15 நிமிடத்திலேயே காய்ச்சல் குணமாகிவிட்டது. கோமூத்திரத்தில் கிருமி நாசினிகள், ஜீரண மண்டலத்துக்கு தேவையான நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன. இதில் மருத்துவக் குணம் நிறைந்துள்ளது” என்று பேசினார். அவருடைய பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. கட்சித் தலைவர்கள் பலர், காமகோடியை கண்டித்து கருத்து தெரிவித்தனர்.
மேலும் காமகோடியின் கருத்து அறிவியலுக்குப் புறம்பானது, மக்களிடையே மூடநம்பிக்கையை வளர்க்கவே உதவும் என்று சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜக அவருக்கு ஆதரவு அளித்தது. இந்நிலையில், ஐஐடி இயக்குநர் காமகோடி கோமியம் குறித்த தனது கருத்துக்கு புதிய விளக்கம் அளித்துள்ளார்.
அதில், "கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் சிறந்த பத்திரிகைகள் அறிவியல் சான்றுகளை வெளியிட்டுள்ளன. விவசாயத்திலும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் முக்கியப் பங்கு வகிக்கும் இயற்கை வேளாண்மை, உள்நாட்டு கால்நடை இனங்களின் பாதுகாப்பை ஆதரிக்கும் சூழலில் எனது கருத்துகள் கூறப்பட்டன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று காமகோடி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னை ஐஐடி-யில் நடக்கப்போகும் 2 நாள் அறிவுத்திருவிழா... புதிய கண்டுபிடிப்புகளை பறைசாற்றப் போகும் மாணவர்கள்...