கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடமே திரிவேணி சங்கமம் ஆகும். இதில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா என்ற புனித நீராடல் நடைபெறுவது வழக்கம். அதன் நீட்சியாக 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவதை மகாகும்பமேளா என்று பக்தர்கள் வணங்கி மகிழ்கின்றனர். இத்தருணத்தில் இங்கு நீராடினால் தங்கள் இகவாழ்க்கை மற்றும் பரவாழ்க்கையின் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
ஜனவரி 13-ந் தேதி தொடங்கி 45 நாட்களுக்கு அதாவது வருகிற 26-ந் தேதி வரை இந்த புனிதநீராடல் நடைபெறும். உலகம் முழுவதும் இருந்து இறைநம்பிக்கை கொண்டவர்கள் இங்கு வந்து நீராடுவார்கள். குறிப்பாக நாகா சாதுக்கள் எனப்படும் உடல் முழுவதும் திருநீறு பூசி, ருத்ராட்டை அணிந்து வலம்வரும் நிர்வாண சாமியார்களை இதுபோன்ற கும்பமேளாவில் தான் காண முடியும். அப்படிப்பட்ட நாகா சாதுக்கள் நீராடும் நாள் ஷாஹி ஸ்னான் எனப்படும் மௌனி அமாவாசை ஆகும்
கடந்த ஜனவரி 29-ந் தேதி மௌனி அமாவாசை தினத்தன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ள போதிலும் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. இதுவரை 35 கோடி பேர் நீராடி உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: காணாமல் போன 13 ஆயிரம் பேர்..! அதிரடியாக மீட்ட "கோயா பாயா" பிரிவு.! கும்பமேளாவில் உபி அரசு அசத்தல்

முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்கள் புனித நீராடி இருந்தனர். இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி நாளை திரிவேணி சங்கமம் சென்று கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நீராடுவதற்கான துறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 1,800 ஏக்கர் பரப்பளவில் பார்க்கிங் வசதியும், கூட்டநெரிசலை கண்காணிக்க 2,750 சிசிடிவிக்களும், குப்பைகளை சேகரிக்க 10 ஆயிரம் தூய்மைப் பணியாளர்களும், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால மருத்துவ உதவிகள் என 24 மணி நேர கட்டுப்பாட்டு மையங்களுடன் இந்த புனித நீராடலை உத்தரப்பிரதேச அரசு செய்து வருகிறது.

கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி ரூபாய் இந்த புனித நீராடல் மூலம் உ.பி.அரசுக்கு வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. நாளை புனித நீராடும் பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள துறவிகளுடன் கலந்துரையாட உள்ளார். தொடர்ந்து உத்தரப்பிரதேச அரசு செய்துள்ள ஏற்பாடுகளையும் அவர் பார்வையிட உள்ளார். ஏனெனில் மகா கும்பமேளாவில் 31 பேர் உயிரிழந்தது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக அதாவது பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்யும் வகையில் பிரதமரின் வருகை அமைய உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இதுவரை 36 கோடி பேர்..!இன்று மட்டும் 60 லட்சம் பேர்..! கதி கலக்கும் கும்பமேளா வசந்த பஞ்சமி