நீட் தேர்வு கொண்டு வரப்பட்டபோது அதிமுக இந்த விவகாரத்தில் மாநில கட்சியாக எதுவும் செய்ய முடியாது, உச்ச நீதிமன்ற தீர்ப்பு, மத்திய அரசு கொண்டு வந்தது, மாநில அரசின் கையில் இது இல்லை என்று தெரிவித்தது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகள் அப்போதைய மாநில அதிமுக அரசு பெருங்குற்றம் செய்தது போலவும், திமுக ஆட்சிக்கு வந்தால் 100% நீட் தேர்வு விலக்கப்படும் என்று பிரச்சாரம் செய்தனர். தமிழக மக்களுக்கு அதிமுக துரோகம் செய்து விட்டதாகவும், மாணவர்கள் உயிரிழப்புக்கு அரசு தான் பொறுப்பு என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது. அதிமுக பாஜக கூட்டணியில் இருந்ததால் இந்த சிலுவையையும் சேர்ந்து சுமந்தது.

அனைத்து பிரச்சனைகளுக்கும் அப்போது ஆட்சி செய்த அதிமுக மீது பழி சுமத்தப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்தியில் வரும் அரசு சட்டம் இயற்றித்தான் மாற்ற முடியும், ஆனாலும் 90 சதவீத மாநிலங்கள் நீட்டை ஏற்ற பிறகு தமிழகத்தில் மட்டும் மாற்றம் கொண்டு வர வாய்ப்பில்லை என்கிற உண்மை தெரிந்தும் கையெழுத்து இயக்கம், நீட் ரகசியம் என்றெல்லாம் தேர்தல் வாக்குறுதி திமுக உள்ளிட்ட கட்சிகளால் கொடுக்கப்பட்டது.
நீட் விலக்கு கொண்டுவர திமுக இளைஞரணி சார்பில் ஒருகோடி கையெழுத்து பெறும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. நீட் விலக்கு ரகசியம் எங்களுக்கு தெரியும் ஆட்சிக்கு வந்தவுடன் 100% நீட் விலக்கு வரும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். ஆனால் தேர்தல் முடிந்து அடுத்து 2024 பொதுத்தேர்தல் வரை நீட் விலக்கு பற்றி பேசிவிட்டு தற்போது சட்டமன்றத்தில் 4 ஆம் ஆண்டில் நீட் விலக்கு மாநில அரசின் கையில் இல்லை என முதல்வர் ஒப்புக்கொண்டுள்ளார். காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி வந்தாலும் நீட் விலக்கு கொண்டுவர முடியாது. காரணம் இந்தியாவின் பெருவாரியான மாநிலங்கள் ஏற்றுக்கொண்ட நீட் தேர்வை ஒரு மாநிலத்துக்காக மாற்ற முடியாது என்பது தெரிந்தும் மீண்டும் மீண்டும் இதேபோல் பேசி வரும் நிலையில் முதல்வர் ஒப்புக்கொண்டது இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் விமர்சனம் வைக்க காரணமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: நீட் விலக்கில் கைவிரித்த திமுக... ரகசியம் தெரியாமலே உதய் விட்ட உதார் வாக்குறுதி... விவாதம் கிளப்பிய விஜயின் ஒற்றை ட்வீட்..!

முதல்வரின் ஒப்புதல் வாக்குமூலத்தை கண்டித்து எம்ஜிஆர் பாடலை மேற்கோள் காட்டி தவெக தலைவர் விஜய் இந்த விவகாரத்தில் விமர்சனத்தை வைத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:
”எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே... நம் நாட்டிலே.... என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது.
கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?
எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை”
இவ்வாறு விஜய் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நீட் விலக்கில் கைவிரித்த திமுக... ரகசியம் தெரியாமலே உதய் விட்ட உதார் வாக்குறுதி... விவாதம் கிளப்பிய விஜயின் ஒற்றை ட்வீட்..!