இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சீமான், பத்தாண்டிற்கும் மேலாகப் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திப் போராடிவரும் அங்கன்வாடி பணியாளர்களின் நியாயமானக் கோரிக்கையை நிறைவேற்றாமல் ஏமாற்றிவரும் திமுக அரசின் அலட்சியப் போக்கை வன்மையாக கண்டிப்பதாக என்று தெரிவித்துள்ளார்.
பெருந்தலைவர் காமராசர் ஆட்சிக்காலத்தில், தமிழ்நாட்டிலுள்ள மழலையர்கள் பசியால் வாடுவதைத் தடுக்கவும், அவர்களின் உடல் மற்றும் மனநலனை பேணுவதற்காகவும் தமிழக கிராமங்கள் தோறும் பால்வாடி மையங்கள் தொடங்கப்பட்டன. பின்னர் 1982 ஆம் ஆண்டு முதல் இந்திய ஒன்றிய அரசின் ஊட்டச்சத்து திட்டத்துடன் சேர்க்கப்பட்டு அங்கன்வாடி மையங்களாகச் செயல்பட்டு வருகின்றன.

தற்போது தமிழ்நாட்டிலுள்ள 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்களில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் என ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், அங்கன்வாடி பணிகள் மட்டுமின்றி மக்கள்தொகை கணக்கெடுப்பு, வாக்காளர் சரிபார்ப்பு, வாக்குச்சாவடி பணிகள், குடும்பக் கட்டுப்பாடு உள்ளிட்ட ஒன்றிய - மாநில அரசுகளின் திட்டங்கள் சார்ந்த பணிகளையும் கடைக்கோடி மக்கள் வரை கொண்டுபோய்ச் சேர்ப்பதில் அங்கன்வாடி பணியாளர்கள் முக்கியப் பங்கு வகித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் மனோஜ் மறைவு..! விஜய், சூர்யா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் அஞ்சலி..!

இருப்பினும், கடந்த 35 ஆண்டுகளாகப் பணிபுரிந்தும்கூட, அங்கன்வாடி பணியாளர்கள் இன்றுவரை திட்டப் பணியாளர்களாகவே இருப்பதாகவும், சிறப்புக் காலமுறை ஊதியமாக மாதம் 3000 முதல் 11,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும், இதனால் தினமும் 8 மணி நேரம் பணிபுரிந்தும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதுபோல் முறையான ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை, ஊக்கத்தொகை ஆகியவை வழங்கப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இது அப்பட்டமான உழைப்புச்சுரண்டல் என்று சாடிய சீமான், அங்கன்வாடி ஊழியரை 3ஆம் நிலை அரசு ஊழியராகவும், உதவியாளர்களை 4ஆம் நிலை அரசு ஊழியராகவும் பணி வரன்முறை செய்து, உரிய ஊதியம் வழங்க வேண்டும்.,இந்திய ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும்., பணி ஓய்வில் செல்லும் போது, பணிக் காலத்தின் அடிப்படையில் அகவிலைப்படியுடன் கூடிய முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், அங்கன்வாடி மையங்கள் சிறப்பாகச் செயல்பட அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட வேண்டும் என்றும் 10 ஆண்டுகள் பணி முடித்த பணியாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும், பதவி உயர்வு வழங்குவதற்கு முன்பும், காலி பணியிடங்களை வழங்குவதற்கு முன்பும் உள்ளூர் பணியிட மாறுதல், வாரிசு பணி ஆகியவற்றை வழங்கிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.மேலும், அங்கன்வாடி பணியாளர்களின் நியாயமான அனைத்து கோரிக்கைகளையும் தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: மனோஜ் போய்விட்டான்டா … துக்கம் தாளாமல் சீமானிடம் கதறிய பாரதிராஜா