தமிழ்நாட்டை உலுக்கிய சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகையை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அண்ணா பல்கலைக்கழக மாணவி, கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். மாநிலத்தை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை தாமாக முன்வந்து பதிவு செய்த சென்னை உயர்நீதிமன்றம், அண்ணாநகர் துணை ஆணையர் சிநேகபிரியா தலைமையில் மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதையும் படிங்க: வழிப்பறி வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டர்.. ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு...!

இதன்பின்னர் ஞானசேகரனை காவலில் எடுத்த சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர், பள்ளிக்கரணை பகுதிகளில் சொகுசு வீடுகளை குறிவைத்து அவன் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததை அறிந்து கொண்டனர். இதுபற்றி பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் மேற்பார்வையில் உதவி ஆணையர் கிறிஸ்டியன் ஜெயசீல், ஆய்வாளர் தீபக்குமார் ஆகியோர் ஞானசேகரனை மூன்றுநாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சூழ்நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வு போலீசார் இன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யப்பட்ட அந்த குற்றப்பத்திரிகையில் ஞானசேகரனுக்கு எதிரான ஆதாரங்கள் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளதாம். விரைவில் அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் குற்றம் நடந்த 60 நாட்களுக்கு உள்ளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அந்தவகையில் டிசம்பர் கடைசி வாரத்தில் இந்த அசம்பாவிதம் நடந்த நிலையில் சரியாக 60 நாட்களுக்காக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. அத்துமீறிய 56 வயது கோயில் பூசாரி..!!