திமுக அரசை விமர்சித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயைக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன்பு, பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடி வரும் குழுவினரை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்தித்தார். அப்போது உரையாற்றிய அவர், நமது ஆட்சியாளர்களுக்கு ஒரு சில கேள்விகள். நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது எட்டு வழி சாலையை எதிர்த்தீர்கள். காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்த்தீர்கள். அதே நிலைப்பாட்டைத்தானே இங்கேயும் எடுக்கணும். அது எப்படி நீங்க எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு. அதே ஆளுட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா? எனக்கு புரியலையே... அதனால இனிமேலும் சொல்றேன். உங்கள் நாடகத்தை எல்லாம் பார்த்துக் கொண்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள்” என்றார்.

இந்நிலையில் நேற்று நெல்லை திமுக பாளையங்கோட்டை பகுதி கழகம் சார்பில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டமானது பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “நேற்று முளைத்தவன் எல்லாம் இன்று வந்து திமுகவுக்கு சவால் விடுகிறான். அவரோட அப்பாவையே நாங்க தான் அறிமுகப்படுத்தினோம். நான் ஒன்று சொல்கிறேன் தி.மு.க-வை எதிர்த்தவன் வாழ்ந்ததாகவும் இல்லை, நிலைத்ததாகவும் இல்லை. பழைய வரலாறுகள் நிறைய இருக்கிறது. அதற்குள் போகக்கூடாது. பேசுவதற்கு யோகிதை வேண்டும்” என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: விஜய் சொன்னது போலவே நடந்துடுச்சு... கார்த்தி சிதம்பரம் விமர்சனத்தை தொடங்கி வைச்சுட்டாரு!
தொடர்ந்து பேசிய அவர், “நேற்று பேசியிருக்கிறான் அந்த சின்ன பையன் நாடகம் ஆடுவதில் தி.மு.க கைதேர்ந்தது என. நீ யார்ரா... யார். உங்க அப்பா யாரு... உங்க ஆத்தா யாருன்னு கேட்டால் பதில் சொல்ல முடியுமா. நடிப்பது மட்டுமல்ல, நடிப்பதற்கு வசனம் எழுதி கொடுத்து நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்டவர் தான் நீங்கள் எல்லாம் என்பதை மறந்துவிடக் கூடாது” என்றார்.

உங்கள் அப்பா யாரு. எங்கள் தலைவர் வசனம் எழுதி கொடுத்த படத்தை இயக்கியவர். இதை எல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என நினைத்துக் கொண்டு பேசுகிறார். ஆனால் மக்களுக்கு இது எல்லாம் தெரியும் என்று விஜயை ஆர்.எஸ் பாரதி விமர்சனம் செய்தார்.
நேற்று பரந்தூர் போய் ஒரு நடிகர் நாடகம் ஆடியிருக்காரு. என்ன முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர் வீட்டுக்கா விமான நிலையம் கட்டிக்கொள்ளப்போகிறார். ஒரு விமான நிலையம் வந்தால் அப்பகுதி எவ்வளவு வளர்ச்சி அடையும் என்பது தெரியுமா?. தூத்துக்குடிக்கு விமான சேவை வந்த பிறகு பாளையங்கோட்டை சாலை எவ்வளவு முன்னேறியுள்ளது. இது ஒரு சின்ன விமான நிலையம் தான், அடுத்ததாக இந்த விமான நிலையத்தையும் மதுரைக்கு இணையானதாக மாற்ற கனிமொழி முயற்சி எடுத்து வருகிறார் என்றார்.

அமெரிக்கா அல்லது வேறு சில நாடுகளுக்கு நேரடியாக செல்வதற்கு பெங்களூர் அல்லது ஐதராபாத் செல்ல வேண்டியுள்ளது. அதனால் தான் பரந்தூரில் விமானம் நிலையம் அமைக்கப்படவுள்ளது. முதல்வரின் உத்தரவின் பேரில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன். எ.வ.வேலு ஆகியோர் பரந்தூர் மக்களை நேரடியாக சந்தித்து பேசியதாகவும், மக்கள் நிலத்தை கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறினார். அந்த கிராமத்தில் வெறும் 1500 பேர் மட்டுமே வாக்களிக்கவில்லை, மற்ற 13 கிராம மக்கள் விமான நிலையம் வர ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதை எல்லாம் அந்தப் பையன் விசாரிச்சானா? என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை ஒருமையில் விமர்சித்தார்.
இதையும் படிங்க: “அதையும் நீங்களே சொல்லிட்டுங்கண்ணா” - திமுகவை அடுத்து விஜய்யை ரவுண்ட் கட்டும் பாஜக!