பிப்ரவரி 5-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்து கடந்த 10-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தவெக ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தன. திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தனது மனுவை தாக்கல் செய்தார். அதேபோன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீதாலட்சுமி என்பவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். கடந்த 17-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. 58 வேட்பாளர்கள் சார்பில் 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. திமுகவின் வி.சி.சந்திரகுமார் சார்பில் 4 மனுக்களும், நாம் தமிழரின் சீதாலட்சுமி சார்பில் 3 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைதேர்தல்...வாய்ப்பை தவறவிட்ட அதிமுக...

இந்நிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 18-ந் தேதி நடைபெற்றது. உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை என்று கூறி 3 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் 55 பேர் களத்தில் நிற்பதாக அறிவிக்கப்பட்டது. வேட்புமனுக்களை திரும்ப பெற நேற்று கடைசிநாள். இதில் 8 பேர் தங்கள் மனுக்களை திரும்ப பெற்றுக் கொண்டனர். எனவே வேட்பாளர்களின் எண்ணிக்கை 47-ஆக குறைந்தது.
ஆனால் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் பத்மாவதி என்பவரின் மனு கடைசி நேரத்தில் நேற்று நிராகரிக்கப்பட்டது. இதன்மூலம் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான தேர்தல் களத்தில் 46 வேட்பாளர்கள் நிற்பார்கள் என்று அதிகாரபூர்வமாக தெரியவந்துள்ளது.

வழக்கமாக இடைத்தேர்தல் என்றால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள் களத்தில் இறங்குவார்கள். இந்தமுறை முதலமைச்சரோ, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினோ தேர்தல் பிரசாரத்திற்கு வர வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது. ஏனென்றால் இடைத்தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் நடைபெறும், பணப்பட்டுவாடா நடைபெறும் என்று எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டிய நிலையில் அதுபோன்றதொரு பேச்சு வந்துவிடக்கூடாது என்பதற்காக திமுக தலைமை யோசிக்கிறதாம்.

தற்போது ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக அமைச்சர் முத்துசாமி மட்டுமே தற்போது தொகுதியில் வாக்குசேகரித்து வருகிறார். அதேசமயம் நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி அனுமதி இன்றி பிரசாரத்தில் ஈடுபட்டார் என்று அவர் மீது வழக்குகள் பாய்ந்துள்ளது. ஆளுங்கட்சிக்கு சாதகமாக அதிகாரிகள் நடந்து கொள்வதாக நாம் தமிழர் கட்சியின் கூறும் குற்றச்சாட்டுக்களை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா மறுத்துள்ளார். பிரசாரத்திற்கு அனுமதிகோரி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஒப்புதல் அளிக்கப்படுவதாகவும் அனுமதி பெறாத இடத்தில் பிரசாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: தை மாதம் சுற்றுப்பயணத்தைத் தொடங்கும் எடப்பாடி பழனிசாமி... கோவையில் இருந்து அரசியல் யுத்தத்தைத் தொடங்கும் இபிஎஸ்...