உத்தர பிரதேச மாநிலத்தில், வீடியோ கேம் என்ற பெயரில் 70 கோடி ரூபாய் மோசடி செய்ததாக 30 பேர் கொண்ட சைபர் குற்ற கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அங்கு பணி புரியும் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி இளமாறன் தலைமையில் இந்த அதிரடி நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் மாவ் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசிப்பவரின் வங்கிக் கணக்கில் ஒரே நாளில் ரூ.37 லட்சம் வரவு வைக்கப்பட்டது. இதில் சந்தேகப்பட்ட மத்திய பொருளாதார குற்றப்பிரிவினர், இதுகுறித்து விசாரிக்க மாவ் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான (எஸ்.பி.) ஜி.இளமாறனுக்கு தகவல் அளித்தனர்.
இதையும் படிங்க: மும்பை தாக்குதல்: தஹவ்வுர் ராணாவை இந்தியாவுக்கு கடத்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
(தமிழ்நாட்டின் மன்னார்குடி கருவாச்சிக் கிராமத்தைச் சேர்ந்த தமிழர் இளமாறன், கால்நடை மருத்துவம் படித்த பின்னர் 2016-ல் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர். தற்போது அவர் உத்தர பிரதேச மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறார்.)
அவருடைய மேற்பார்வையில் விசாரணையில், வங்கிக் கணக்கை வைத்துள்ளவருக்கு மாதம் ரூ.10,000 கொடுத்து விட்டு வேறு யாரோ அதை பயன்படுத்தி வருவது தெரிந்தது. மேலும், அந்த கும்பல் கோரக்பூர் மாவட்டத்தில் இருந்து சைபர் குற்றங்களில் ஈடுபடுவதும், அடுக்குமாடி குடியிருப்பில் 3 வாடகை வீடுகளில் தங்கியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் ஒரே நேரத்தில் வீட்டில் இருக்கும் போது, இளமாறன் போலீஸ் படையுடன் சென்று கும்பலை சுற்றி வளைத்தார். திரைப்படங்களில் வரும் காட்சியை போல் 30 பேர் கொண்ட கும்பலை ஒரே நேரத்தில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரம்மி விளையாட்டுகளில் ஒன்றை சட்டவிரோதமாக நடத்தியது, வரி ஏய்ப்பு செய்தது, பொதுமக்களை ஏமாற்றியது தெரிய வந்தது. கடந்த 3 ஆண்டு களில் மட்டும் இந்த கும்பல் ரூ.70 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது.
இந்த மோசடிக்காக கிராம மக்கள் சிலருக்கு மாதந்தோறும் பணம் கொடுத்து அவர்களுடைய வங்கி கணக்குகளை பயன்படுத்தி வந்துள்ளனர்.
எஸ்.பி. இளமாறன் கூறும்போது, “முதல் முறையாக விளையாடுபவர்களுக்கு ரூ.10,000 வரை வெற்றி பணமாக அளித்து இந்த கும்பல் தங்கள் வலைகளில் சிக்க வைக்கிறது. இக்கும்பலின் தலைவனை யாரும் நேரில் பார்த்தது இல்லை. அவர் வெளிநாடுகளில் இருந்து மோசடியில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன” என்றார்.
அவர் மேலும் கூறும்போது, " குற்றவாளி களில் ஐந்து பேர் கோரக்பூர் மற்றும் மாவ் பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றவர்கள் மண்டை மாநிலமான ஒடிசா பீகார் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

கடந்த மூன்று மாதங்களாக இந்த மோசடி நடைபெற்று வந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த நடவடிக்கையின் போது பத்து மடிக்கணினிகள், 129 சிம் கார்டுகள், 10 ஆதார் அட்டைகள், இரண்டு டேப்லெட், இரண்டு கியூ ஆர் குறியீடு ஸ்கேனர்கள், 7 பான் கார்டுடன் 117 மொபைல் போன்கள், 12 காப்பக பதிவேடுகள், ஐந்து ஓட்டுநர் உரிமங்கள், 161 ஏ டி எம் கார்டுகள், 3 ரவுட்டர்கள், 125 வங்கி கணக்குகள், அவர்களிடமிருந்து பாஸ்புக், ரூட்டர் சார்ஜர்கள் 38 வங்கி காசோலை புத்தகங்கள் மற்றும் 13 மொபைல் சார்ஜர்கள் பறிமுதல் செய்யப்பட்டன"என்றார்.
இதையும் படிங்க: 350 ரூபாய், 5 ரூபாய் புதிய நோட்டுகள் வெளி வருகிறதா? 200 ரூபாய் நோட்டு செல்லாதா? ரிசர்வ் வங்கி விளக்கம்