மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதிமுக என்றாலே எம்ஜிஆர், ஜெயலலிதா தான்... இந்த இரண்டு பெயர்கள் தான் இன்றளவும் அதிமுகவின் வாக்குவங்கிக்கான மூல சாவியாக உள்ளன. அவர்கள் செய்த சாதனைகள், கொண்டு வந்த திட்டங்கள் ஆகியவற்றைப் பேசிப்பேசித்தான் இப்போதைய அதிமுகவினர் தேர்தல் பிரசாரத்தில் வாக்கு கேட்டு வருகின்றனர். அந்த அளவுக்கு தமிழர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவர்களாக இருவரும் விளங்குகின்றனர்.
இதையும் படிங்க: கூட்டணி இருக்கும்போது 'வேட்டு' அணி எதற்கு..? எடப்பாடியார் போட்ட சபதம்..!
அதிலும் ஜெயலலிதாவின் ஆளுமை இன்றைய காலகட்ட இளைஞர்களுக்கு ஒரு உத்வேகம் ஊட்டும் கருவி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆண்கள் மட்டுமே கோலோச்சும் அரசியல் உலகில் தன்னந்தனி பெண்ணாக அவர் பெற்ற வெற்றிகள், அவர் ஆட்சியின்போது எடுத்த தடாலடி முடிவுகள் (சாதகங்களும் உண்டு, பாதகங்களும் உண்டு) தனிச்சிறப்பு வாய்ந்தவை.

அவரது 77-வது பிறந்தநாளை எழுச்சியோடு கொண்டாட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார். அந்தவகையில், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகை என்ற பெயரிலான அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகள் வண்ணப்பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்தனர்.

அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட பலர் சூழ கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார். அதிமுக வாழ்க, புரட்சித் தலைவி அம்மா வாழ்க, இபிஎஸ் வாழ்க என்று தொண்டர்கள் முழக்கமிட்டனர். பின்னர் ஆளுயுர மாலையை ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி அணிவித்தார்.

எல்லோரும் எதிர்பார்த்த முன்னாள் அமைச்சரும், நடப்பு எம்எல்ஏ-வுமான செங்கோட்டையன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அத்திக்கடவு - அவிநாசி திட்ட விழாவில் எம்ஜிஆர் - ஜெயலலிதா புகைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டதாக கூறி அந்த விழாவில் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆலோசனைக் கூட்டம் ஒன்றிலும் செங்கோட்டையன் பங்கேற்றதும் அதிமுகுவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்தசூழ்நிலையில், ஜெயலலிதா பிறந்தநாள் விழா, அதுவும் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது அரசியல் களத்தில் புதிய கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக ஆட்சி வேணும்னா அணிகள் இணையணும்... ஓயாமல் வலியுறுத்தும் ஓ.பன்னீர்செல்வம்..!