அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தீவிரமாக கையில் எடுத்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அதிமுக சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில், தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உண்டான மாணவி அளித்துள்ள வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சார் யார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என முதன் முதலில் அதிமுக தான் போராட்டத்தை முன்னெடுத்தது.

அதிமுக பயன்படுத்திய யார் அந்த சார்? என்ற வார்த்தை தற்போது தமிழக எதிர்க்கட்சிகள் தொடங்கி பட்டி தொட்டியில் உள்ள பாமரர்கள் வரை திமுகவை நோக்கி கேள்வி எழுப்பும் வார்த்தையாக மாறியுள்ளது. இன்று முதல் முறையாக தொடங்கிய 2025ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கூட யார் அந்த சார்? என்ற வாசகம் அடங்கிய பேட்ஜ் உடனே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுக தொடர்ந்து போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது.
இதையும் படிங்க: பொள்ளாச்சி மேட்டர கெளறீங்களா...! இந்தா வாங்கிக்கோ திருப்பி அடிக்கும் அதிமுக!
இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் பேச்சாளராகவும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரிலும், நமது அம்மாவிலும் தலைமை செய்தி ஆசிரியராக இருந்த மருது அழகு ராஜ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “கொடநாடுல சிசிடிவியை ஆஃப் பண்ணச் சொன்ன அந்த சார் யாருன்னு கேளுங்கப்பா..” என பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்துள்ள பாலியல் கொடுஞ்செயல் குறித்து எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேசமயம் இந்த விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என நீதிமன்றமும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால் இதை எல்லாம் காதில் வாங்காமல் எடப்பாடி பழனிசாமி, யாரு அந்த சார்? என்ற ஒரே விவகாரத்தை மட்டுமே எழுப்பிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது கொடநாட்டில் நடந்த கொலை வழக்கு குறித்து என்றாவது சட்டப்பேரவையில் பேசியிருக்கிறாரா?. அவர் முதல்வராக காரணமாக இருந்த ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தில் நடந்த கொலை சம்பவங்கள் குறித்து என்றாவது பேசினாரா?. கொடநாடு எஸ்டேட்டில் 26 சிசிடிவி தினேஷ் என்ற ஊழியர் 24 மணி நேரத்திற்கு முன்னதாக போடப்பட்ட பாதுகாப்பை பின்வாங்கும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறதே அந்த உத்தரவை பிறப்பித்தது யார்?

நமது அம்மாவில் கொடநாடு என்ற வார்த்தையையே பயன்படுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பித்தார்கள். தனது கட்சி தலைவியின் வீட்டில் நடந்த கொள்ளை, அதற்காக நடந்த கொலைகள் தொடர்பான வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளதே, அதைப் பற்றி என்றாவது கேள்வி எழுப்பினாரா? என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்துள்ள விவகாரத்தை வைத்தே ஓபிஎஸ் டீம் தங்களது முக்கியமான பிரச்சனையான கொடநாடு விவாகரத்தை மீண்டும் ஊடகங்களில் பேசுபொருளாக மாற்றியுள்ளது.
இதையும் படிங்க: உடையும் திமுக கூட்டணி... திருமாவுக்கும் கொக்கி.. குதூகலத்தில் எடப்பாடி பழனிசாமி..!