தருமபுரி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்களை திமுக மாவட்ட பொறுப்பாளர் ஒருமையில் திட்டுவதும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பதும் கண்டிக்கத்தக்கவை என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுகவின் பொறுப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட தர்மசெல்வன் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக ஊடகங்ளில் வேகமாக பரவி வருகிறது. அந்த ஆடியோவில்,‘‘ இந்த மாவட்டத்தில் ஆட்சியராக இருந்தாலும், காவல் கண்காணிப்பாளராக இருந்தாலும், அவர்களுக்குக் கீழ் உள்ள அதிகாரிகளாக இருந்தாலும் நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவங்க இருக்க மாட்டாங்க. இதை நான் செய்வேன். எனக்குத் தெரியாமல் அவர்கள் ....... கூட விட முடியாது. இங்கு யாரும் கேம் ஆட முடியாது. அதிகாரிகள் கேம் ஆடினால் அவர்கள் கதை முடிந்து விடும்’’ என்று தர்மசெல்வன் பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க: தினம், தினம் ஷுட்டிங் நடத்துகிறீர்கள்... முதலமைச்சர் மீது பாயும் அண்ணாமலை...!
அரசு நிர்வாகத்தின் ஆணி வேராக திகழும் அதிகாரிகளை ஆட்சியாளர்கள் மிகவும் மரியாதையாக நடத்த வேண்டும். ஆனால், எந்த அதிகாரத்திலும் இல்லாத, பத்தாம் வகுப்புக் கூட படிக்காத ஒருவர், திமுகவின் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு விட்டார் என்ற ஒரே காரணத்திற்காக மாவட்ட ஆட்சியரையும், காவல்துறை கண்காணிப்பாளரையும் மிரட்டும் வகையில் பேசுவது அரசு எந்திரத்தின் மீது நடத்தப்பட்ட அவமரியாதையான தாக்குதல் ஆகும்.

மாவட்ட அதிகாரிகளை மிரட்டுவதுடன் மட்டும் இல்லாமல், அதற்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் அங்கீகாரமும் இருப்பதாக மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.தமது ஒப்புதலுடன் தான் அவர் அப்படி பேசினாரா? என்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும்; அப்படி இல்லையெல்லாம் தர்மசெல்வன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகாரிகள் என் பேச்சைக் கேட்காவிட்டால் அவர்களின் கதையை முடித்து விடுவேன், அவர்கள் இனி இருக்க மாட்டார்கள் என திமுக மாவட்டச் செயலாளர்களை வைத்து மிரட்டுவது தான் திராவிட மாடலா? என்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விளக்கமளிக்க வேண்டும். அதிகாரிகளை அச்சுறுத்திய திமுக மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவுடன் கூட்டணி இல்லை- விஜய் திட்டவட்டம்..! திமுக vs தவெக-வாக மாறும் அரசியல் களம்..!