''தமிழ்நாடு ஒரு காலத்தில் மிகவும் முற்போக்கான மாநிலமாக இருந்தது. ஆனால் திமுக அரசின் கொள்கைகளால் அது குழப்பத்திற்கு ஆளாகியுள்ளது. இது மக்களை வருத்தப்படுத்தி உள்ளது. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அதை வேரோடு பிடுங்க தமிழக மக்கள் தயாராக உள்ளனர்'' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
இதுகுறித்து டைம்ஸ் நவ் உச்சி மாநாடு, 2025- பேசிய அமிஷா, ''தமிழ்நாடு அரசு இன்னும் மருத்துவம், பொறியியல் கல்வியை தமிழில் தொடங்கவில்லை. புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கவில்லை. ஆளும் திமுக 'தமிழ் விரோத' கட்சி. 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தென் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சிக்கு வரும்.

தமிழ்நாட்டில் திமுக அரசு ஊழலில் மட்டுமே ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக தொழில்களும், இளைஞர்களும் மாநிலத்திலிருந்து இடம்பெயர்ந்து வருகின்றனர். தென்னிந்தியாவின் மிகவும் முற்போக்கான மாநிலமாகக் கருதப்பட்ட தமிழ்நாடு, திமுக அரசின் கொள்கைகளால் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் வருத்தமடைந்து உள்ளனர். வரும் தேர்தலில் தமிழகத்தில் ஒரு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைக்கப்படும்.
இதையும் படிங்க: இ.பி.எஸை 3ம் இடத்துக்கு தள்ளிய விஜய்..! இப்போது தேர்தல் நடந்தால் தமிழகத்தில் யார் முதல்வர்..? சி-வோட்டரில் அதிர்ச்சி..!

தமிழக மக்கள் திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவார்கள். நான் சமீபத்தில் தமிழகத்தில் மேற்கொண்ட பயணங்களில் மக்களின் நாடித்துடிப்பை உணர முடிந்தது. 2026 ஆம் ஆண்டு மாநிலத் தேர்தல்களை நோக்கமாகக் கொண்டு பிராந்தியக் கட்சி இந்தப் பிரச்சினையை எழுப்பியுள்ளது. திமுக தனது ஊழலை மறைக்கவும், வரவிருக்கும் தேர்தலில் உடனடி தோல்வியை தடுக்கவும் மட்டுமே மொழி மற்றும் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினையை எழுப்புகிறது. தொகுதி மறுசீரமைப்பு செய்வதால் யாருக்கும் எந்த அநீதியும் ஏற்படாது என பிரதமர் மோடி அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளார்.

மத்திய அரசு எல்லை நிர்ணயம் குறித்து ஏதாவது சொன்னதா? இப்போது ஏன் அதை எழுப்பினார்கள்? தேர்தலின் காரணமாக இந்த நாடகம் நடத்துகிறது திமுக. ஐந்து ஆண்டுகளாக, அவர்கள் ஊழலில் ஈடுபட்டனர். இப்போது, அவர்கள் திடீரென்று விழித்தெழுந்து உள்ளனர்.
எல்லை நிர்ணயத்தில் யாருக்கும் எந்த அநீதியும் செய்யப்படாது என்று நான் உங்களுக்குச் சொல்ல முடியும். யாருக்கும் அநீதி ஏற்பட 0.0001 சதவீதம் கூட வாய்ப்பு இல்லை. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது மகனும் மாநில அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை தனது வாரிசாக நியமிக்க விரும்புகிறார். ஏனெனில் திமுக வாரிசு அரசியலை பின்பற்றுகிறது.

தமிழ் மொழியில் மருத்துவம், பொறியியல் படிப்புகளைத் தொடங்காத திமுக அரசு உண்மையில் தமிழுக்கு எதிரானது. தேசிய கல்விக் கொள்கையின்படி ஆரம்பக் கல்வியை தாய்மொழியில் கற்பிக்க வேண்டும். மருத்துவம், பொறியியல் கல்வி போன்ற தொழில்நுட்பக் கல்வியை தமிழில் கற்பிக்க திமுகவிடம் நான் கேட்டுள்ளேன். ஆனால் அவர்கள் அதைத் தொடங்கவில்லை. அவர்கள் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கவில்லை. மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET) 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. ஆனால் திமுகவின் எதிர்ப்பின் காரணமாக தமிழில் நடத்தப்படவில்லை.'' எனத் தெரிவித்தார்.

அதிமுகவுடன்- பாஜக கூட்டணி குறித்து கேட்டதற்கு, ''விவாதங்கள் நடந்து வருவகிறது. சரியான நேரம் வரும்போது, அதை நாங்கள் வெளியிடுவோம்" என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: இப்தார் நோன்பில் கூச்சமே இல்லாமல் பங்கேற்கிறார் எடப்பாடியார்… இஸ்லாமியர்களை உசுப்பேற்றிய மு.க.ஸ்டாலின்..!