இலங்கை கடற்படையால் அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதும், விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், வலைகள் அறுத்தெறியப்படுவதும் வாடிக்கையாகும் நிலையில், அங்கு அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்கும் விதமாக பேச்சுவார்த்தை நடத்த ராமேஸ்வரம் மீனவ குழு ஒன்று இலங்கை செல்கிறது.

தென்தமிழக மீனவர்களின் தலையாய பிரச்னை, இலங்கை கடற்படையின் தாக்குதலை எதிர்கொள்வது தான். குறிப்பாக ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுகின்றனர். அது மட்டுமல்லாது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான விசைப்படகுகளை அவர்கள் பறிமுதல் செய்கின்றனர், ஒருகட்டத்தில் அதனை ஏலம் விட்டு அந்த தொகையை இலங்கையின் கருவூலத்தில் சேர்த்துக் கொள்கின்றனர். சிறையில் அடைபடுவதோடு, தங்கள் வாழ்வாதாரத்தையும் தொலைத்துவிட்டு நிர்கதியாக நிற்கும் நிலைக்கு தமிழக மீனவர்கள் தள்ளப்படுகின்றனர்.
இதையும் படிங்க: தாயகம் திரும்ப விரும்பும் ஈழ தமிழர்களுக்கு உதவ தயார்.. உதவிக்கரம் நீட்டிய இலங்கை..!

இதற்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். வேலைநிறுத்தம் உள்ளிட்ட அடையாள போராட்டங்களையும் அவர்கள் முன்னெடுக்கின்றனர். அதுமாதிரியான சமயங்களில் தமிழக முதலமைச்சர் சார்பில் பிரதமருக்கும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் மீனவர் விவகாரம் தொடர்பாக கடிதங்கள் எழுதப்படும். உடனே இந்திய வெளியுறவுத்துறை சார்பில் இலங்கை அரசுக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்படும். ஆனால் ஒருசில நாட்களிலேயே இலங்கை கடற்படை தன்னுடைய சுயரூபத்தை காட்ட ஆரம்பித்து விடுகிறது.
இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் முயற்சி ஒருபக்கம் இருந்தாலும், ராமேஸ்வரம் மீனவ பிரதிநிதிகள் ஒன்றுகூடி ஆலோசித்து இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர். ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா தலைமையில், 5 பேர் கொண்ட குழுவினர் இன்று பிற்பகல் திருச்சியில் இருந்து கொழும்புவுக்கு விமானம் மூலம் புறப்படுகின்றனர்.

அங்கிருந்து யாழ்ப்பாணம், காங்கேசன் துறைமுகம், ஊர்க்காவல் ஆகிய இடங்களுக்கு சென்று பறிமுதல் செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை பார்வையிட உள்ளனர். பின்னர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்கள் சந்திக்க உள்ளனர். இறுதியாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்து நிரந்தர தீர்வு காண வேண்டுகின்றனர்.
வருகிற ஏப்ரல் 1-ந் தேதி வரை அதாவது ஆறு நாட்களுக்கு இந்த ஐவர் குழுவினர் இலங்கையில் இருந்து மீனவர்களையும், படகுகளையும் மீட்க முடியுமா என்று முயற்சி எடுக்க உள்ளனர். நியாயமாக பார்த்தால் மத்திய அரசு செய்ய வேண்டிய வேலை இது.
இதையும் படிங்க: ரூ.150 கோடி ஊழலுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கைது.. அப்போ ரூ.1000 கோடிக்கு..? பாஜகவுக்கு சீமான் நறுக் கேள்வி.!!