காங்கிரஸ் கட்சி கடந்த 50 ஆண்டுகளுக்குப்பின் புதிய அலுவலகத்துக்கு நேற்று சென்றது. 24 அக்பர் சாலையில் அரை நூற்றாண்டுகளாக செயல்பட்ட காங்கிரஸ் கட்சி, இனிமேல் கோட்லா சாலைக்கு மாறியுள்ளது.
இந்த புதிய அலுவலகத்துக்கு காங்கிரஸ் கட்சி “ இந்திரா பவன்” என்று பெயரிட்டுள்ளது. இந்த அலுவலகத்தை முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி திறந்துள்ள புதிய அலுவலகத்துக்கு இந்திரா காந்தியின் பெயரான “ இந்திரா பவன்” எனப் பெயரிடாமல், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பெயரை வைக்க வேண்டும், “சர்தார் மன்மோகன் சிங் பவன்” என்று குறிப்பிட வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோது அவரை கடுமையாக விமர்சித்தும், மவுனப் பிரதமர், பொம்மைப் பிரதமர், மவுன சாமியார் என்றெல்லாம் கிண்டல் செய்த பாஜக, மன்மோகன் சிங் மறைவுக்குப்பின் அவரின் பெயரை காங்கிரஸ் கட்சி வைக்க வேண்டும் என்று புதிதாக கோரிக்கை விடுத்துள்ளது. பாஜக தகவல்தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் அமித் மாளவியா எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகத்தின் வெளியே பதாகைகள், சுவரொட்டிகள் இருப்பதைப் பார்த்தேன். புதிய அலுவலகத்துக்கு இந்திரா பவன் என்ற பெயரை மாற்றி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மரியாதை செலுத்தும் வகையில் “ சர்தார் மன்மோகன் சிங் பவன்” என மாற்றுங்கள்.
இதையும் படிங்க: மத்திய அரசு ஊழியர்கள் இனி ‘ஜாலி’தான்! உற்சாக அறிவிப்பு வெளியிட்ட மோடி அரசு...

மன்மோகன் சிங் எனது அரசியல் வழிகாட்டி என ராகுல் காந்தி தெரிவித்துள்ள நிலையில், மன்மோகன் சிங் மறைந்து சில நாட்களில் புத்தாண்டு கொண்டாட வியட்நாமுக்கு சென்றுவிட்டார்.
மன்மோகன் சிங் காலமாகியபின் அவரின் அஸ்தியைப் பெறும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் ஒரு தலைவர்கள்கூட வரவில்லை. மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சிக்கும், தேசத்துக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு, சேவை ஆகியவற்றுக்கும், கடைசிகாலம் வரை அவருக்கு செய்த அவமரியாதை குறிப்பாக சோனியா குடும்பத்தார் செய்த அவமரியாதைக்கு பரிகாரம், மரியாதை செய்ய புதிய அலுவலகத்துக்கு மன்மோகன் பெயரை காங்கிரஸ் கட்சி சூட்ட வேண்டும். அதுதான் சரியான முடிவாக இருக்கும்” எனத் தெரிவித்தார்
பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் ஷேசாத் பூனாபவல்லா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ மன்மோகன் சிங்கை வைத்து காங்கிரஸ் கட்சி கீழ்த்தரமான அரசியலை நடத்தியது. அவர் இருக்கும் காலத்தில் புறக்கணிப்பு செய்த நிலையில் அவர் மறைவுக்குப்பின், காங்கிரஸ் கட்சி புதிய அலுவலகத்துக்கு இந்திரா காந்தி பெயருக்குப் பதிலாக மன்மோகன் சிங் பெயர் சூட்ட வேண்டும்.
சீக்கிய சமூகத்தை அவமதிக்க வேண்டும், அவதூறு செய்ய வேண்டும், எப்போதும் குடும்பம்தான் முதலிடம் என்ற அசிங்கமான மனநிலை கொண்டவர்களாக இருந்தனர். நரசிம்மராவ், அம்பேத்கர், பிரணாப் முகர்ஜி ஆகிய பெருந்தலைவர்களை காங்கிரஸ் கட்சி அவமானப்படுத்தியது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வேறு நாடாக இருந்தால் மோகன் பாகவத் சிறையில் இருந்திருப்பார்.. ராகுல் காந்தி ஆக்ரோஷம்!