கடைசி காலத்தில் எம்ஜிஆர் கருணாநிதி மீது கடுமையான கோபத்தில் இருந்தார், அவர் திமுகவில் இணைய இருந்தார் என துரைமுருகன் கதை கட்டுகிறார் என்று கே.எஸ். ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் உள்ள பதிவு வருமாறு...
"புதிய தலைமுறைக்கு சமஸிடம் துரைமுருகன் அளித்த பேட்டியில், “எம்ஜிஆர் தனது கடைசி காலத்தில் திமுகவில் இணைய விரும்பினார் இன்னும் ஒரு நாள் இறக்காமல் தாமதித்து இருந்திருந்தால் எம்ஜிஆர் திமுகவில் இணைந்து இருப்பார்” என்று சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க: திமுக ஆட்சி முடிய 13 அமாவாசைதான் இருக்கு.. திமுகவை பொளக்கும் பழனிச்சாமி!

எனக்குத் தெரிந்து இப்படியான சம்பவங்கள் எப்போது நடந்தது என்றால் ஒடிசாவின் முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக் தமிழ்நாட்டிற்கு வந்து திமுக-அதிமுக இரண்டு கட்சிகளும் இணைய சமாதானம் பேச வந்த போது நடந்தது. முதல்வர் எம்ஜிஆர்- கலைஞரை அழைத்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதியில் பிஜு பட்நாயக் இருவரையும் சந்தித்தது பேச வைத்தார்.
தமிழக முதலமைச்சராக இருந்த அதிமுக நிறுவனர் எம்.ஜி.இராமச்சந்திரனை சந்தித்து திமுகவும் – அதிமுகவும் இணைய வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தினார். சென்னை வந்து கலைஞருடன் பேசினார், பின்னர் கலைஞரும் – எம்.ஜி.ராமச்சந்திரனும் சந்தித்து பேசினார்கள். வெற்றிகரமாக நடந்து முடிந்தது பேச்சுவார்த்தை. ஆனால் இணைப்பு சாத்தியமாகவில்லை.

இதுப்பற்றி கலைஞர் நெஞ்சுக்கு நீதியின் மூன்றாம் பாகத்தில் விளக்கமாக எழுதியுள்ளார். பின்னர் ஒருமுறை, பண்ருட்டி இராமச்சந்திரன்தான் திமுக – அதிமுக இணைப்பை தடுத்தார் என பகிரங்கமாக கலைஞர் பேசினார். பிராந்திய கட்சிகள் வலிமையாக இருந்தால் தான் தேசிய கட்சிகளை எதிர்க்க முடியும், மாநில நலனை காக்க முடியும் என்ற கருத்தை உடையவர். அதனாலே திமுக – அதிமுக இணைய பிஜு பட்நாயக் முயற்சி செய்தார். பின், எம்ஜிஆர் இணைப்பை விரும்பவில்லை. அப்போது ஜெயலலிதா அரசியல் களத்தில் இல்லாத நேரம்.
எம்ஜிஆர் மறைவு அன்று கலைஞர் ஈரோடு கூட்டத்தில் கலந்துக்கொண்டு ஏற்காடு எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை திரும்பினார். அன்றைக்கு மாவட்டச் செயலாளர் டி.ஆர்.பாலுவோடு சென்ட்ரல் ரயில்வே நிலையத்லிருந்து ராமாபுரம் தோட்டத்திற்கு அதி காலையில் சென்று தனது அஞ்சலியை செலுத்திய போதும் சலசலப்பு ஏற்பட்டது.

கவர்னர் சுந்தர்லால் குரானா முன்னிலையில், முதல்வர் பதவியை ஏற்ற ஜானகி அம்மையாருக்கு பிரச்சனைகள் இருந்தது. ஆர்.எம்.வீரப்பன் ஆலோசனையின் பேரில் தேர்தல் கூட்டணிக்கு என பலரின் ஆதரவுக் கரங்கள் வேண்டி காங்கிரஸ், திமுக என ஜானகி அம்மாள் எல்லோரிடம் தூது போய்க் கொண்டிருந்தார் . கலைஞரிடம் ஆதரவு கேட்டு கோபாலபுரம் வீட்டுக்கே வந்தார். உண்மையில் அந்த இக்கட்டுகளை கலைஞர் தந்திரமாக வேடிக்கைதான் பார்த்தார். இது ஒரு புறம் இருக்க திமுகவுடன் ஒன்றிணைய வேண்டும் என்பதை எம்ஜிஆர் அவர் உயிரோடு இருக்கும் போதே மறுத்துவிட்டார் என்பது தான் இங்கு முக்கியமாக சொல்லவேண்டிய விஷயம்.
காரணம் ஈழப்பிரச்சனகளின் போது திமுக தலைமை மீது பொறுப்புகள் கலைஞர் மீது எம்ஜிஆர் கடும் கோபத்தில் இருந்தார் . அவர் கையாண்ட எதுவும் ஈழத் தமிழருக்கு ஆதரவாக இல்லை என்கிற நிலைப்பாடு அவரிடம் இருந்தது. குட்டிமணி, ஜெகன் போன்றோர் கைது செய்யப்பட்ட போது எம்ஜிஆர் சங்கடம் அடைந்தார். கடைசி காலத்தில் எம்ஜிஆர் பேசிய பேச்சுகளும் அவர் தொடர்ந்து உரையாற்றியது, பேட்டி கொடுத்ததெல்லாம் பார்த்தால் இந்த விஷயங்கள் நன்றாகப் புரியும்.
அதை ஒட்டி ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் மீதும் கடுமையான கோபத்தில் எம்ஜிஆர் இருந்தார். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் ஈழப் பிரச்சினையின் போது நாங்கள் எம்ஜிஆர் உடன் அதிகம் தொடர்பில் இருந்தோம்.

துரைமுருகன் சொன்னதாக சமஸ் சொல்வது போல் இருந்தால் எம்ஜிஆர் இறந்தவுடன் ஜானகி அம்மையார் இடைக்கால முதல்வராக பொறுப்பேற்க முடிவு செய்யப்பட்டு அதற்காக திமுகவுடன் ஆதரவைக் கேட்டபோது கலைஞர் சரி என்று சொல்லி அவருக்கு ஆதரவு அளித்திருக்க வேண்டியதுதானே. அந்த நேரத்தில் காங்கிரஸிடம் கூட ஜானகி உதவி கேட்டார். ராஜீவ்காந்தியும் சரி என சொல்லி பின் ஜெயலலிதா சொல் கேட்டு ஆதரவு தர மறுத்து விட்டார். மூப்பனார் அப்போதைய பேட்டிகளை கவனித்தால் தெரியும்.
ஒருவேளை இடைக்கால முதல்வராக ஜானகி இருக்க கலைஞர் ஒத்துழைத்து இருந்தால் நான் ஆட்சியை விட்டு விலகி கலைஞரிடம் தமிழ்நாட்டின் ஆட்சி பொறுப்பைக் கொடுத்திருப்பேன் என்று ஜானகி அம்மையார் சொல்லியதெல்லாம் உண்டு. அப்படி நடந்திருந்தால் ஜெயலலிதா என்ற அரசியல் அத்தியாயத்தின் வருகையே அவசியமற்றதாகிப் போய் இருக்கும். அதற்குப் பிறகு வந்த தேர்தலில் ஜானகி அம்மையாரும் ஜெயலலிதாவும் தனித்தனியாகப் போட்டியிட்டு ஓட்டுகள் சிதறியதால் 1989 தேர்தலில் திமுக ஜெயித்ததும் “நாங்கள் எப்படி ஜெயித்தோம் என்பதை பற்றி பேசாமல் தாங்கள் எவ்வாறு தோற்றோம் என்பதை பற்றியே அண்ணா திமுக பேசிக் கொண்டு இருக்கிறது” என்று கலைஞர் கிண்டலாகச் சொன்னார்.

உண்மையில் ஜானகி அம்மாவின் நம்பிக்கையானது பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்துடன் அண்ணா திமுக ஒன்றிணைய வேண்டும் என்பதாக இல்லை, அப்படியென்றால் எப்படி துரை முருகன் இதுபோல் இல்லாத ஒன்றை சொல்கிறார்! அதை எல்லாம் பயன்படுத்தி இடையில் ஜெயலலிதா வராமல் இருந்திருந்தால் அந்த ஒன்றிணைப்பு நிகழ வாய்ப்பு இருந்திருக்கலாம், அதற்கு பிறகு பதினைந்து வருடம் காத்திருக்க வேண்டி வந்ததை திமுகவினர் மறந்து விட்டார்களா?
பிஜு பட்நாயக் சமாதானத்தில் எம்ஜிஆர் கலந்து கொண்டு பேசியது ஆரம்பகாலம் மட்டுமே. தன் இறுதிக் காலத்தில் அப்படியான முடிவு ஏதும் எம்ஜிஆர் எடுக்கவில்லை. இப்படியான பிம்பங்களை கட்டுவதுடன் இன்று வந்து எதற்காக, ஏன் இப்படி பொய் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.
எம்ஜிஆர் உடன் தொடக்க காலத்தில் அருகில் இருந்தவர் துரைமுருகன் அவரது மாணவப் பருவத்தில் அவரைப் படிக்க வைத்து அரசியல் மயம் ஆக்கியது எல்லாம் எம்ஜிஆர் தான்.

ஆகவே அவர் சொல்வது வேறு விஷயம், அவர் உள்ளத்தளவில் இன்று வரை தன்னை வளர்த்தெடுத்த எம்.ஜி.ஆரின் பக்தர் தான். இறுதிக்காலத்தில் எம்ஜிஆர் உடன் நாங்கள் அருகில் இருந்து பார்த்த வரையில் அவர் கலைஞர் மீது அவர் கையாண்ட ஈழ தமிழர்கள் சார்ந்த தவறுகளின் மீது கடுமையான கோபத்தில் இருந்தார் என்பதுதான் உண்மை. ராஜீவ்காந்தி உடல்நிலை சரியில்லாத எம்ஜிஆரை முதல்வர் பதவியை ஜெயலலிதாவிடம்
கொடுத்து விடுங்கள் என சொன்னது. ராஜிவ் விரும்பிய புலிகளை தவிர்த்த இந்திய- இலங்கை ஒப்பந்தம் -1987,
அமெரிக்க செல்ல வேண்டிய நாள் அன்று எம்ஜிஆரை ராஜிவ் தடுத்து நிறுத்தி தனது கடற்கரை கூட்டத்தில் இந்திய- இலங்கை ஒப்பந்தம் பாராட்டி பேச சொன்னது என்று பல்வேறு கவலையான சிந்தனையில் எம்ஜிஆர் இருந்தார். புலிகள் விஷயத்தில் கடைசி காலத்தில் கலைஞர் மீது கோபத்தில் இருந்தார். எம்ஜிஆரின் கடைசி நாட்களில் நோய்வாய்பட்டு எந்த முடிவும் எடுக்க இயலாமல் இருந்தார் என்பதுதான் உண்மை. அப்போது பிரபாகரன், பாலசிங்கம், பேபி மற்றும் அடியேனும் அதை நேரடியாக பார்த்தோம். அப்போது காளிமுத்துவும் உடன் இருந்தார்.

சமஸ் போன்றவர்கள் துரைமுருகன் சொன்னதாக எம்ஜிஆர் ஒரு நாள் உயிரோடு இருந்திருந்தால் திமுகவில் இணைந்து இருப்பார் என்று சொல்வதெல்லாம் எவ்வளவு அபத்தம். அக்காலத்தில் பாவம் ஜானகி அம்மையாரை பரிதவிக்க விட்டதுதான் மிச்சம். இது மாதிரி விஷயத்தில் இவர்கள் என்ன லாபம் அடைகிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு காலத்தில் திமுகவிற்கு ஆதரவாக இருந்த என்னை போன்ற உழைத்தவர்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு, இப்படியான சுழலில் சுய லாபம் அடித்து கொள்ளையடித்த பிறகு இவர்கள் பேசுவதெல்லாம் நியாயமாகி விடுகிறது. இன்றைய திமுக அரசியல் கேந்தரம் அல்ல. அது ஒரு சுய லாப நோக்கம் உள்ள தனிக் குடும்ப வாரிசு வணிக நிறுவனம், இதை சரி என்று சொல்லும் சமஸ் போன்றவர்கள் இதை சிந்திப்பது இல்லை" இவ்வாறு கே.எஸ்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: இருந்தாலும் மறைந்தாலும்.... பகைவருக்கு தோல்வியை பரிசாக கொடுத்த எம்ஜிஆர்..