மணிப்பூரில் ஏற்பட்ட ரணம் ஆறுவதற்கு நீண்டகாலம் தேவைப்படும் நிலையில், 3வது மொழி விவகாரம், தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் ஆகியவை நாட்டில் வடக்கு தெற்கு என அரசியல்ரீதியாக பிளவுபடுத்தும் செயல்கள் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இரு நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டத்தின் முடிவில் நாட்டில் நிலவும் முக்கியப் பிரச்சினைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பிலும், அது தொடர்பான அமைப்பில் இருந்தும் 1482 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் இணைப் பொதுச்செயலாளர் சி.ஆர். முகுந்தா பேசுகையில் “ மணிப்பூர் சூழல் மிகவும் மோசமாக இருப்பதாக ஆர்எஸ்எஸ் நம்புகிறது. ஆனால் மத்திய அரசு சமீபத்தில் எடுத்த சில நடவடிக்கைகளால் இன்று எங்களுக்கு ஒரு நம்பிக்கை கிடைக்கிறது.
இதையும் படிங்க: அவுரங்கசீப் சமாதி விவகாரம்.. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தெரிவித்த கருத்து.. இந்துத்துவ அமைப்புகளுக்கு பின்னடைவு.!!
மத்திய அரசு எடுத்த சில முடிவுகளை ஆய்வு செய்தோம், அதில் சில அரசியல் நோக்கோடும் சில நிர்வாகரீதியாகவும் இருக்கின்றன. நிச்சயமாக இந்த முடிவுகள் மணிப்பூர் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும் ஆனால், ஒரு அமைப்பாக இந்த முடிவை ஆய்வு செய்வோம், மணிப்பூரில் அமைதியான சூழல் திரும்ப, அனைத்து சமூகத்தினரும் ஒருங்கிணைந்து வாழ நீண்டகாலம் தேவைப்படும்.
மணிப்பூரில் கலவரத்தில் ஈடுபட்டுவரும் இரு பழங்குடியின பிரிவினரான குக்கி, மெய்தி சமூகத்தினரை ஒன்றாக இணைக்க ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகிறது. பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான முடிவுகள் எடுக்கலாம். தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையில் எந்த மாநிலத்திலும் தொகுதி குறைப்பு இருக்காது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் முடிவுகள் குறித்துப் பேசுவதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அதிகாரம் இல்லை என்றாலும், உள்துறை அமைச்சர் பேசியதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன், இன்று ஒரு தென் மாநிலத்திற்கு மக்களவையில் 544 இடங்கள் இருந்தால், அந்த விகிதம் அப்படியே இருக்கும். மொழிப் பிரச்சினை அல்லது தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான சர்ச்சையால் வடக்கு-தெற்கு பிளவை உருவாக்குவதன் மூலம் தேசிய ஒற்றுமைக்கு சவால் விடும் சக்திகளைப் பற்றி சங்க பரிவார் கவலை கொள்கிறது.
தொகுதி மறுசீரமைப்பு தவிர்த்து, பல்வேறு விவகாரங்களில் முரண்பாடு நிலவுகிறது, பெரும்பாலும் அரசியல் ரீதியாக நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ரூபாய் சின்னம் விவகாரம், மூன்றாவது மொழி ஆகியவை அரசியல் ரீதியான நோக்கத்தை கொண்டவை. இந்த பிரச்சினைகளை அரசியலால் தீர்க்க முடியாது, சமூகத் தலைவர்களால் தீர்க்கலாம், தேசத்துக்கும் நல்லதல்ல.

ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பொருத்தவரை கல்வி என்பது மும்மொழியா அல்லது இரு மொழியா என்பது முக்கியமல்ல, தினசரி கருத்துப் பரிமாற்றம் தாய்மொழியில் இருக்கிறதா என்பதுதான் முக்கியம். இது தொடர்பாக நாங்கள் தீர்மானம் முன்பே நிறைவேற்றி இருக்கிறோம். ஆனால், நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன், பள்ளி அமைப்புமுறையில் மட்டுமல்ல சமூகத்திலும் பலமொழிகள் தெரிந்து வைத்திருத்தல் அவசியம்.
ஒன்று கட்டாயம் தாய்மொழி மற்ற மொழிகள் அவரவர் விருப்பம். நான் தென் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் டெல்லியில் வசிக்கிறேன், தினசரி அலுவல்களைப் பார்க்க எனக்கு இந்தி மொழி அவசியம் அதனால் இந்தி மொழி கற்கிறேன். என் வாழ்க்கைக்கும் ஒரு மொழி தேவைப்பட்டால் அதையும் கற்பதில் தவறில்லை. அது ஆங்கிலமாக இருந்தாலும் அதையும் கற்கலாம்.
இவ்வாறு முகுந்தா தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் அமைப்புடனான தொடர்பு எங்களுக்கு சிறப்புரிமை.. மோடி சொன்ன 1+1 தத்துவம் என்ன..?