பரியேறும் பெருமாள் பட பாணியில் தாழ்த்தப்பட்ட சிறுவன் மீது சிறுநீர் கழித்த அவலம் மதுரையில் அரங்கேறியுள்ளது.
உசிலம்பட்டி அருகே பட்டியலின இளைஞர் மீது சிறுநீர் கழித்தும், அடித்தும் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள தகவல் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சங்கம்பட்டியைச் சேர்ந்த 17 வயது பட்டியலின இளைஞர் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, டிரம்ஸ் வாசிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 16ம் தேதி பொங்கலன்று, முன்பகை காரணமாக அதே ஊரைச் சேர்ந்த கிஷோர், உக்கிரபாண்டி, மணிமுத்து, பிரம்மா, சந்தோஷ், நித்திஷ் ஆகிய 6 பேர் அந்த இளைஞனைக் கடத்திச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: மதுரை -தூத்துக்குடி ரயில் திட்டம் கைவிடப்படவில்லை.. தெற்கு ரயில்வே விளக்கம்..

ஊரில் இருந்த கம்மாய் பகுதிக்கு இளைஞனைத் தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு ஏற்கனவே 20க்கும் மேற்பட்டோர் கூடியிருந்ததாக கூறப்படுகிறது. அசுரன் படத்தில் தனுஷை ஊர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைப்பது போல் இளைஞரையும் அங்கியிருந்த அனைவரது காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்க வற்புறுத்தியுள்ளனர். அதன் பின்னர் அவரது சாதிப் பெயரைச் சொல்லி சரமாரியாக தாக்கியதோடு, சிறுவன் ஒருவனை அழைத்து பட்டியலின சிறுவன் மீது சிறுநீர் கழிக்க வைத்ததாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 20 பேர் தன்னை தாக்கியதாகவும்,3 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உசிலம்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 6 பேர் மீது சாதிய வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 6 பேரிடமும் உசிலம்பட்டி நகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மதுரை மாவட்ட எஸ்.பி. அரவிந்த் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இளைஞன் மீது சிறுநீர் கழிக்கப்பட்டதாக கூறுவது உண்மையல்ல” எனக்கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டங்ஸ்டன் திட்டத்திற்கு மத்திய அரசிடம் ‘ஓகே’ சொன்ன தமிழக அரசு... திமுகவின் முகமூடியைக் கிழித்தெறிந்த அண்ணாமலை!