மாநிலங்களவை எம்.பி., சீட் கிடைக்கும் என்று மனக்கோட்டை கட்டி வந்த தேமுதிகவிற்கு, அதிமுகவின் மௌனம் மனவலியை கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள மாநிலங்களவை எம்.பி.,க்கள் ஆறு பேருக்கான பதவி காலம் வாரம் ஜூலை மாதத்துடன் நிறைவு பெறுகிறது. காலியாகும் 6 எம்.பி இடங்களில் இரண்டு சீட்டுகள் அதிமுகவுக்கு கிடைக்கும் என்ற நிலையில் எப்படியாவது ஒரு எம்.பி பதவியை கைப்பற்ற தேமுதிக துடித்துக் கொண்டிருக்கிறது.
2026 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது நிலையான கூட்டணி அமைக்கக் காத்திருந்த அதிமுகவுக்கு தேமுதிக மட்டுமே கை கொடுத்தது. பாஜக, திமுக தரப்பிலிருந்து கூட்டணிக்கு அழைப்பு வந்த போதும்கூட, அதிமுக கூட்டணியில் தேமுதிக ஐக்கியமாக முக்கிய காரணமே ராஜயசபா எம்.பி சீட்டு தான் என கூறப்பட்டது. ஆனால் தேர்தல் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும்கூட தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட்டு கிடைக்குமா? கிடைக்காதா? என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் மக்களவைத் தேர்தலின் போது தேமுதிகவிற்கு ராஜ்ய சபா சீட்டு என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஆழ்ந்த நம்பிக்கையோடு கூறினார். தேமுதிகவில் யாருக்கு எம்.பி பதவி வழங்கப்படும் என்பதை விரைவில் அறிவிப்போம் என்றும் நம்பிக்கையோடு தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: "யானைப் பசிக்கு சோளப்பொறி” - மத்திய பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த்!
''கூட்டணி அமைக்கும் போது ராஜ்யசபா சீட்டுக்காக கையெழுத்திட்டு உறுதி செய்யப்பட்டது. ராஜ்யசபா தேர்வுக்கான அந்த நாள் வரும் பொழுது தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சார்பாக உறுப்பினராக டெல்லிக்கு யார் செல்ல இருக்கிறார் என்பதை அந்த நேரத்தில் தலைமை கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்'' என நம்பிக்கை தெரிவித்து ருந்தார் பிரேமலதா.தேமுதிகவிற்கு மாநிலங்களை சீட் கொடுக்கப்படுமா? இல்லையா? என்பதே இன்னும் முடிவே ஆகவில்லை. இந்தச் சூழலில் அதற்குள்ளாக யாரை டெல்லிக்கு அனுப்ப வேண்டும் என்பது முதற்கொண்டு பிரேமலதா கணக்கு போட்டு காத்திருப்பது அவர் கூறியதன் மூலம் தெரிய வந்தது.

ஆனால் பிரேமலதா கூறியதை போல தேர்தல் ஒப்பந்தத்தின் போது மாநிலங்களவை எம்.பி., சீட் கொடுப்பதாக அதிமுக எங்குமே உறுதியளிக்கவில்லை. கூட்டணி ஒப்பந்தத்தில் கூட ஐந்து மக்களவைத் தொகுதி ஒதுக்கப்படுவதாக மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான போது அதிமுக அலுவலகத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், நாளை நல்ல செய்தி வரும் என முகம் நிறைய மகிழ்ச்சியோடு கூறியிருந்தார். பிரேமலதா கூறியபடி மறுநாள் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அதிமுகவினர் மொத்தமாக தேமுதிக அலுவலகத்திற்கு சென்று அளவலாவி, அன்பை பகிர்ந்தனர்.
ஆனால், மாநிலங்களவை சீட் குறித்து மட்டும் அவர்கள் வாயைத் திறக்கவே இல்லை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்கிற ஏக்கத்தில் இருந்த பிரேமலதா விஜயகாந்த், ''வெற்றிலை மாற்றியாச்சு. விரைவில் நல்ல செய்தி வரும்'' என்று ரஜினி பாணியில் கூறியிருந்தார். ஆனால், காலத்தின் சோதனையோ என்னவோ? பிரேமலதா விஜயகாந்துக்கு இன்னும் நல்ல செய்தி வரவில்லை. தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் கொடுக்க அதிமுக தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. ஆகையால் தான் மாநிலங்களவை சீட்டு குறித்து பலமுறை கூறியும் கூட இன்னும் அதிமுக எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி தாண்டி, ஜெயக்குமார் போன்ற இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட தேமுதிகவின் பேச்சுக்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை. கூட்டணி பேச்சு வார்த்தையின்போது கூட மாநிலங்களவை சீட் குறித்து அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று தான் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக சொல்லப்படுகிறது.
ஆனால், மாநிலங்களவை சீட் கொடுக்க ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக்கொண்டதாக பிரேமலதா விஜயகாந்த் ஒவ்வொரு இடத்திலும் பதிவு செய்வது வருவது அதிமுகவிற்கான மறைமுக அழுத்தமாக பார்க்கப்படுகிறது. மாநிலங்களவை சீட்டுக்காக இணைந்த அதிமுக- தேமுதிக கூட்டணி, அதே மாநிலங்களில் மாநிலங்களவை சீட்டுக்காக விரக்தியில் விரிசலை நோக்கி நகர்கிறதா? என்கிற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது.
இதையும் படிங்க: ஆடிக் கார் சந்திப்பு... ஆடிப்போன எடப்பாடி..! 2 மணி நேர சந்திப்பின் பின்னணியில் எஸ்.பி.வேலுமணி..?