'ஓ.பி.எஸை கொசு என்கிறார் ஆ.பி.உதயகுமார். ஆனால், ஓ.பி.எஸ் என்கிற கொசு கடித்தால் அவரால் தாங்க முடியாது'' என அதிமுக உரிமை மீட்பு குழுவை சேர்ந்த புகழேந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''அதிமுகவை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமி ஒத்துவர மாட்டேன் என்கிறார். முழு முயற்சி எடுத்து விட்டோம். எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.தற்போது ஆர்.பி.உதயகுமார் தொடங்கி விட்டார். நான் அண்ணன் ஓபிஎஸ்ஐ விட்டு தூரமாக இருந்தாலும், அவரை உதயகுமார் விமர்சிப்பது சரியாக இல்லை. சில உண்மைகளை சொல்லி ஆக வேண்டும். ஓபிஎஸ் மிகவும் நல்லவர். ஆனால், வல்லவர் இல்லை. அதனால் தான் அவரால் வெற்றி பெற முடியவில்லை.

ஓ.பி.எஸ் மீது புரட்சித்தலைவி அம்மா கோபமாக இருந்ததாக ஒரு பொய்யான குற்றச்சாட்டை உதயகுமார் முன் வைக்கிறார். ஆனால், ஒரு நாள் கூட புரட்சித்தலைவி அம்மா அவரை தூரத்தில் வைத்து, அமைச்சரவையில் இருந்து விடுவித்ததே இல்லை. உதயகுமார் நேர்மாறான கருத்துக்களைச் சொல்கிறார். அவர் வந்த ஆறு மாதத்தில் அவரது பதவி பறிபோனது. இணக்கமான சூழல் ஏற்படும்போது ஏதாவது சொல்லி உதயகுமார், ஜெயக்குமார் போன்றவர்கள் கெடுத்து விடுகிறார்கள்.
இதையும் படிங்க: 'ஓ.பிஎஸிடம் வைத்துக் கொள்… என்னிடம் வேண்டாம்…' ஆர்.பி.உதயகுமாரை வெளுத்து வாங்கிய செங்கோட்டையன்..!
ஓபிஎஸை கொசு உதயகுமார். கொசு மிகவும் ஆபத்தானது. மலேரியா, டெங்கு போன்றவை கொசுவிலிருந்து தான் வரும். நாங்கள் இல்லாத தைரியத்தில் பேசுகிறார் அவர். ஆனால், ஓ.பி.எஸ் என்கிற கொசு கடித்தால் அவரால் தாங்க முடியாது. புரட்சித்தலைவி அம்மா, கட்சித் தலைவரின் புகைப்படத்தை தூக்கி விட்டு அவிநாசி- அத்திக்கடவு திட்டத்திற்கு விழா எடுக்கிறார்கள். ஆர்.பி.உதயகுமார் அந்த விழாவில் கலந்து கொள்கிறார்.

இணைப்புக்கு விடாமல் இப்படிப்பட்டவர்கள் தான் இந்த வேலையை செய்கிறார்கள். இப்படியே போனால் 2026 ல் ஒரு சீட் கூட அதிமுகவுக்கு தேராது. நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு வந்து விட்டோம். இப்படியே போனால் உதயகுமாருக்கு நான் சொல்கிறேன். 2026 தேர்தலில் உனக்கும் சேர்த்து டெபாசிட் போகும். பசும்பொன் அய்யா பெயரை இந்த விமான நிலையத்திற்கு வைப்போம் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள். அதற்கு நடவடிக்கை உண்டா செல்லூர் ராஜு, உதயகுமார் அவர்களே? செங்கோட்டையன் அடுத்த ஓபிஎஸ். தங்கமானவர், தகராருக்கு வராதவர்'' எனத் தெரிவித்தார்
.
அம்மாவிற்கு பிறகு ஓ.பி.எஸுக்கு முதல்வர் பதவி குத்தகையாக கொடுக்கப்பட்டது என ஆர்.பி.உதயகுமார் கூறியது குறித்து கேட்டதற்கு, பதிலளித்த புகழேந்தி,''குத்தகை என்ன விலை என்று கேட்ட அவர் எடுக்க வேண்டியதுதானே? குத்தகை என்று அம்மா முன்பாக பேசியிருந்தால் அம்மாவின் செருப்பு பிஞ்சிருக்கும். எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழ் வார்த்தைகளே சரியாக வராது. ஆனால் அவரை புரட்சித் தமிழன் என உதயகுமார் அழைக்கிறார்.
இரட்டை இலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி பயந்து கொண்டிருக்கிறார். ராமநாதபுரத்தில் ஓ.பி.எஸ் போட்டியிட்டதற்கு நான் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால், அவருடன் இருப்பவர்களின் பேச்சை கேட்டு அவர் அங்கு சென்று நின்றார். சென்றது தவறு இல்லை. அங்கு சென்று ரவீந்திரநாத் போன்றவர்களை நிறுத்தி இருக்கலாம்.

ஆர்.பி.உதயகுமார் சில நேரங்களில் சாமியாரை போலவே இருப்பார். இப்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஜால்ரா அடித்துக் கொண்டு இருக்கிறார். என் அப்பா மொழி போராட்டத்திற்கு ஆறு முறை சிறை சென்றார். நான் நினைத்திருந்தால் அம்மாவிடம் பேசி எங்கேயோ போய் இருக்கலாம். ஆனால் நானும் அதற்காக ஆசைப்படவில்லை. மதுரை மண்டலமே தோல்வி அடைந்த உடனே காசு வைத்திருக்கும் மூன்று பேர் தான் ஜெயித்திருக்கிறார்கள். மற்றவர்கள் உயிர் இருக்கும் வரை, எங்கள் உடலில் தெம்பு இருக்கும் வரை, இந்த கட்சியை காப்பாற்ற கடுமையாக போராடுவோம். பழனிச்சாமி என்கிற சர்வாதிகாரியிடம் இருந்து கட்சியை காப்பாற்ற சிரமமாக உள்ளது'' என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிரிப்பு போலீஸ் மாதிரி அவரு சிரிப்பு அரசியல்வாதி.. யாரைக் கலாய்க்கிறார் ஓ. பன்னீர்செல்வம்..?