அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை, அண்ணாநகர் சிறுமியிடம் பாலியல் சீண்டல், ஈசிஆர் பகுதியில் காரில் வந்த பெண்களுக்கு மிரட்டல் என அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் குறித்த செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ள நிலையில், தாம்பரம் அருகே இளம்பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் புதிதாக இணைந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்படப்பை பகுதியில் வசித்து வருபவர் பொன்னம்பலம். 60 வயதான இவர், அதிமுக கட்சியில் குன்றத்தூர் ஒன்றிய அதிமுக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
இவருடைய வீட்டில் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் இளம்பெண்கள் சிலர் வாடகைக்கு குடியிருந்து உள்ளனர். அவர்களிடம் இவர் அவ்வப்போது இரட்டை அர்த்த மொழியில் பேசுவதும், சைகைகள் காட்டுவதுமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு உச்சநீதிமன்றத்தில் காத்திருக்கும் செக்....
இதனால் பாதுகாப்பு கருதி அந்த இளம்பெண்கள் வீட்டை காலி செய்து வேறு ஒரு பகுதியில் வீடு எடுத்து தங்கி உள்ளனர். வேறொரு வீட்டிற்கு அந்த பெண்கள் சென்றபோதும், செல்போன் மூலம் தொடர்புகொண்டு அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். உச்சக்கட்டமாக இன்று காலை அந்த இளம்பெண்கள் குடியிருக்கும் வீட்டிற்கே நேரில் சென்றுள்ளார்.

கதவை திறந்து அத்துமீறி உள்ளே நுழைந்து சொந்தவீட்டு உரிமையாளர் போல தரையில் அமர்ந்து கொண்டு அந்த பெண்களிடம் வரம்பு மீறி பேசியுள்ளார். இதனால் வெறுத்துப்போன அந்த பெண்கள் கையில் துடைப்பக்கட்டையுடன் அவரை வெளியேறும்படி கூறியுள்ளனர். அப்போதும் வாக்குவாதம் செய்துள்ளார் பொன்னம்பலம். பிறகு துடைப்பத்தால் பொன்னம்பலத்தை அடித்த அந்த பெண்கள், வலுக்கட்டாயமாக அவரை வெளியே தள்ளி கதவை மூடியுள்ளனர்.
நடந்த சம்பவம் குறித்து மணிமங்கலம் காவல்துறையிடம் அந்த பெண்கள் புகார் அளித்தனர். இதுபற்றி விசாரணை மேற்கொண்ட போலீசார், நடந்த சம்பவங்கள் குறித்த வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் அதிமுக நிர்வாகி பொன்னம்பலத்தை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: அதிமுகவை வழிக்கு கொண்டு வர ரெய்டா? யாருக்கு பதில் சொல்கிறார் நயினார் நாகேந்திரன்?