நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் பொறுப்பேற்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார். “பாஜகதான் உண்மையான ஜனநாயக கட்சி. தற்போது 33 மாவட்ட தலைவர்களை அறிவித்துள்ளோம். மீதமுள்ள தலைவர்களை விரைவில் அறிவிப்போம். தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி வேகமாக உள்ளது. முதல் கட்டமாக 48 லட்சம் பேர் பாஜகவில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கட்சியில் முழு நேரமாக வேலை செய்ய தீவிர உறுப்பினர்கள் 55 ஆயிரம் பேர் உள்ளனர்.

அமைச்சர் சேகர்பாபு ஏளனமாகப் பேசுகிறார். அவரைப் போல ஏளனப் பேச்சு பேசினால் அழிவு நிச்சயம். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மகனுக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் நிற்கும் அவல நிலை அலங்காநல்லூரில் நேர்ந்துள்ளது. தென்னிந்தியாவிலேயே கல்வித் தரத்தில் தமிழ்நாடுதான் பின்தங்கியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இப்படித்தான் உள்ளது. ஐஏஎஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 40-வது ரேங்கில் உள்ளனர். அடுத்த கட்டத்திற்கு மாணவர்கள் தயார் படுத்தப்படவில்லை. விவசாயத்தில் முதல் 10 மாசுபட்ட ஆறுகளில் 6 தமிழகத்தில்தான் உள்ளன. சுற்றுசூழல் மைனிங், மணல் எடுப்பது, ஆழ்துளை கிணறுகள் என அதிகரித்து தமிழகத்தில் வெப்பம் அதிகமாகி வருகிறது.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செவிலியர் பிரசவம் பார்த்து குழந்தை இறந்த செய்தி வருகிறது. ஆணவப் படுகொலைகள், பாலியல் வன்முறையும் அதிகரித்து வருகிறது. எல்லாவற்றிலும் தோல்விதான். டாஸ்மாக் மட்டும்தான் சக்சஸ். வேங்கை வயல் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசுவதே இல்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை, காவல் துறை பொங்கல் விழாவில் 8 பேரிடம் செயின் பறிப்பு என சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. அதனால்தான் மாற்றம் தேவை என்கிறோம்.
அமைச்சர் பொன்முடி பேசும் போது “நீ எஸ்.சி. தானே?” எனக் கேட்கிறார். இவர்கள் சமூக நீதியை பற்றி பேசுகிறார்கள். உட்கட்சியிலேயே சமூக நீதி கிடையாது. இவர்கள் நமக்கு சமூக நீதி குறித்து பாடம் எடுக்கிறார்கள். நம்மை மதவாதிகள் என்பார்கள். இப்தார் விருந்தில் மட்டும் குல்லா போட்டு உட்கார்ந்து மதசார்பின்மை பற்றி பேசிகிறார்கள். தமிழகத்தை கடன்கார மாநிலமாக குடிகார மாநிலமாக மாற்றி வைத்துள்ளனர். இவர்களை வீட்டுக்கு அனுப்ப கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும்" என்று அண்ணாமலை தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜகவுக்கு அதிர்ச்சி தந்த தயா சங்கர்..! நெல்லையில் தத்தளிக்கும் தாமரை..!
இதையும் படிங்க: தயவு செய்து ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றிவிடாதீர்கள்.. மோடி சர்க்காருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!