மதிமுக முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்த தன்னை விடுவித்துக் கொள்வதாக துரை வைகோ அறிவித்துள்ளார். எந்த சூழ்நிலையிலும் வைகோவின் மனம் கலங்கி விடாமல் அவரை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக மதிமுக முதன்மைச் செயலாளராக துரை வைகோ இருந்து வந்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடல் நலக்குறைவின் காரணமாக ஓய்வெடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதன் பேரில் அவரது மகன் துரை வைகோ முதன்மைச் செயலாளராக பொறுப்பேற்றார் . இதனை அடுத்து மதிமுக வின் இன்னொரு முகமாக துரை வைகோ அறியப்பட்டார். தொடர்ந்து பல்வேறு அரசியல் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தார் துரை வைகோ.

இந்த நிலையில் தன்னை மதிமுகவிலிருந்து விடுவித்துக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், வைகோவிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக ஒருவர் செய்து வருவதாகவும், நான் தலைமை கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகுதான் அதை சகித்துக் கொள்ள முடியாமல் நான்கு ஆண்டுகளாக இப்படி கட்சிக்கும், தலைமைக்கும் தீராத பெரும்பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் முதன்மைச் செயலாளர் என்று தலைமை கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை எனவும் கூறி உள்ளார்.
இதையும் படிங்க: மகனா? மல்லை சத்யாவா? குழப்பத்தில் வைகோ.. பாமகவை அடுத்து மதிமுகவிலும் மல்லுக்கட்டு..!

எனவே கழகத்தின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன். ஏப்ரல் இருபதாம் தேதி நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்பேன். ஆனால் அதன் பிறகு தலைமை கழகத்தின் மிக முக்கிய முடிவுகள் மேற்கொள்ளும் கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறி உள்ளார்.
என்னால் இயக்கத்திற்கோ, இயக்கத் தந்தைக்கோ எள்முனை அளவு கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்றுதான் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், அதே நேரத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்று உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். திருச்சி தொகுதி மக்கள் மகத்தான வெற்றி பெற செய்து தங்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு என்னை அனுப்பி வைத்துள்ளார்கள்.

அந்த மக்களுக்காக ஒரு எம். பி என்ற வகையில் கண்ணும் கருத்துமாக கடமை ஆற்றுவேன். எப்போதும் போல இயக்கத் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அரனாகவும் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளும் தோழனாகவும் இருப்பேன் என்பதையும் தெரிவித்துள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளாக நான் மேற்கொண்ட முயற்சிகளை கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் தொடர வேண்டும் என்றும் எந்த சூழ்நிலையிலும் நம் தலைவர் மனம் கலங்கி விடாமல் அவரை பாதுகாக்க வேண்டும் என்று இரு கரம் கூப்பி கேட்டுக் கொள்வதாகவும் துறை வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இது குழந்தையை நீரில் வீசுவது போன்றது.. ரிசர்வ் வங்கிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொந்தளித்த வைகோ!!