தமிழ்நாடு CB-CID-யின் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT), கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக, மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் முன்னாள் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி (PSO) பெருமாளை விசாரிக்க உள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர் பெருமாள். கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் முக்கிய விசாரணையில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோரை விசாரித்துள்ள சிறப்பு புலனாய்வு போலீசார் தற்போது பெருமாளையும் அழைத்துள்ளனர். ஜெயலலிதா உடன் சசிகலாவோ தலைமை செயலாளரும் இல்லாத நேரத்தில் கூட நிழல் போல பாதுகாத்து வந்தவர்கள் தான் பெருமாள் மற்றும் வீர பெருமாள் ஆகிய பாதுகாப்பு படை உதவியாளர்கள்.

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில், 2017 ஏப்ரல் 23ம் தேதி அன்று கொள்ளை மற்றும் கொலை சம்பவம் நடைபெற்றது. ஜெயலலிதாவின் முன்னாள் ஓட்டுநர் சி.கனகராஜ் தலைமையிலான 11 பேர் கொண்ட கும்பல், அங்கு கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நம்பி, ஆயுதங்களுடன் இரு கார்களில் வந்தனர். இரவு 10:30 மணியளவில் எஸ்டேட்டின் 8-வது நுழைவாயிலில் இருந்த பாதுகாவலர் கிருஷ்ண தபாவை கட்டி லாரியின் பின் பகுதியில் அடைத்தனர். பின்னர் 10-வது நுழைவாயிலில் இருந்த மற்றொரு பாதுகாவலர் ஓம் பகதூரை தாக்கி கொலை செய்து, பொருட்களை கொள்ளையடித்தனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் பாஜக ஆதரவுடன் ஜெயலலிதா ஆட்சி... 2026 தேர்தலுக்கு டிடிவி தினகரன் புது ட்ராக்..!
பின்னர் அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்களால் இந்த வழக்கு மர்மமாக மாறியது. கனகராஜ் சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் விபத்தில் உயிரிழந்தார். கேரளாவைச் சேர்ந்த மற்றொரு குற்றவாளி சயான், பாலக்காட்டில் விபத்தில் சிக்கி, அவரது மனைவி மற்றும் மகள் இறந்தனர்; ஆனால் அவர் உயிர் பிழைத்தார்.

ஜூலை 3, 2017 அன்று, கொடநாடு எஸ்டேட்டின் கணினி ஆபரேட்டர் தினேஷ் குமார் (29) கோத்தகிரியில் மர்மமான முறையில் இறக்க, போலீஸ் அதை தற்கொலை என அறிவித்தது. இது வழக்குடன் தொடர்புடைய நான்காவது மரணமாகும்.

இந்த நிலையில் தான் செவ்வாய்க்கிழமை, மற்றொரு முன்னாள் PSO வீரப்பெருமாள், காந்திபுரத்தில் உள்ள CB-CID அலுவலகத்தில் மூன்று மணி நேரம் விசாரிக்கப்பட்டார். அப்பொழுது போலீசாரிடம் பேசிய அவர், "நான் 1991 மற்றும் 2002-2016 வரை ஜெயலலிதாவின் PSO-வாக பணியாற்றினேன். அவர் மறைவுக்குப் பின் வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டேன்," என்று கூறினார். அவரது வாக்குமூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
சிறப்பு புலனாய்வுத் துறையின் தீவிர விசாரணையில் பெருமாள் போன்ற முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளின் விசாரணை, கொடநாடு சம்பவங்களின் சிக்கலான பின்னணியை வெளிச்சத்திற்கு கொண்டுவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: குழந்தை ஜெயலலிதா..! அண்ணன் ஜெயராமன் உடன் இருக்கும் அரிய புகைப்படம்...!