ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து, காஷ்மீர் மக்கள் தாமாக முன்வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது வரவேற்கத்தக்கது. காஷ்மீர் மக்களின் உணர்வுகள் மீதான தாக்குதலை அவர்கள் ஒருபோதும் ஏற்பதில்லை. மதங்களை கடந்து மனிதத்துவத்தை போற்றும் காஷ்மீர் மக்களின் இந்த போராட்டம் மகத்தானது என, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
இது குறித்து ஆசாத் கூறியதாவது: 1989 - 90ம் ஆண்டு காலத்தில் நான் காஷ்மீர் முதல்வராக கூட இல்லை. மகாராஷ்டிராவை சேர்ந்த ராஜ்யசபா எம்பியாக இருந்தேன். அப்போதெல்லாம் காஷ்மீரில் 30 - 40 பேர் அடிக்கடி கொல்லப்பட்டனர். ஆனால், பயங்கரவாத தாக்குதல்களை கண்டிக்க கூட பொதுமக்களுக்கு தைரியம் இருந்ததில்லை.

நான் சொல்லும் காலத்தில் ஜம்மு - காஷ்மீரில் எந்த அரசும் அமைந்திருக்கவில்லை. இங்கு சொல்லக்கூடிய அளவில் பெரிய தலைவர்கள் இருந்ததில்லை. ஆனால் தற்போது நிலையை தலைகீழாக மாறியுள்ளது. பஹல்காம் தாக்குதலை கண்டித்து, ஜம்மு - காஷ்மீர் முழுதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. காஷ்மீரின் அனைத்து மக்களும் பயங்கரவாதிகளுக்கு எதிராக கண்டித்துள்ளனர்.
மசூதிகளில் பயங்கரவாதிகளுக்கு எதிரான குரல் எழுந்துள்ளது. பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்காக சிறப்பு தொழுகையும் நடைபெற்றது. இது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. நான் பார்த்த காஷ்மீர் வேறு. தற்போதுள்ள காஷ்மீர் வேறு. காஷ்மீர் மக்கள் துணிச்சலுடன் பயங்கரவாதத்தை எதிர்க்கின்றனர்.
இதையும் படிங்க: அடிச்சி காலி பண்ணுங்க...! இந்திய ராணுவத்துக்கு முழு பவர் கொடுத்த ராஜ்நாத் சிங்... அரக்கன்களை அழிக்க அதிரடி ஆபரேஷன்!

பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும் என நான் அழைப்பு விடுக்கலாம் என நினைத்தேன். ஆனால், அதற்கு முன்பாகவே மக்கள் ஒன்று திரண்டுவிட்டனர். அவர்களுக்கு எந்த தலைவரின் தேவையும் இருக்கவில்லை. மக்களே முன்னின்று பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அரசியல் தலைவர்கள் வாய்திறக்கும் முன்பே இரவோடு இரவாக மக்கள் போராட துவங்கிவிட்டனர். இது வரவேற்கத்தக்கது. முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் இந்த மாநிலத்தில் இப்படிப்பட்ட பெரிய போராட்டத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. பயங்கரவாதிகளை கண்டித்து, அவர்களுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கியதும், மாநிலம் முழுவதும் கடையடைப்பு நடத்தியதும் நான் பார்த்ததில் இதுவே முதல் முறை.

காஷ்மீரில் இம்முறை நடத்தப்பட்ட தாக்குதல், மனித்துவத்தின் மீதான தாக்குதல். காஷ்மீர் மக்களின் உணர்வுகள் மீதான தாக்குதல். இதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதை தெளிவுபடுத்தி உள்ளனர். இது பாகிஸ்தான் துாண்டுதலின் பேரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. காஷ்மீர் மக்கள் மனிதத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்து - முஸ்லிம்களின் நல்லிணக்கத்தை விரும்புகின்றனர்.
அனைத்து தரப்பு மக்களின் உணர்வுகளை மதிக்கின்றனர். நாடு சுதந்திரம் அடைந்தபோது, மேற்கு வங்கத்தின் நவகாளியில் மிகப் பெரிய வன்முறை நிகழ்ந்தது. அந்த கலவரத்தின் தீ நாடு முழுதும் பற்றி எரிந்தது. நாடே கலவர பூமியாக காட்சி அளித்த போதும், காஷ்மீரில் இருந்து ஒரு வெளிச்சம் தெரிவதாக மகாத்மா காந்தி கூறினார். அதை நான் பார்லிமென்ட்டில் பல முறை பேசியுள்ளேன்.

அந்த ஒளிக்கீற்று தான் தற்போதும் வெளிப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் மதத்தின் பெயரால் நடத்திய தாக்குதலை காஷ்மீர் மக்கள் ஏற்கவில்லை. அவர்கள் மனிதாபிமானத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் காஷ்மீர் மக்களின் உணர்வுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதனால் தான், ஒட்டு மொத்த காஷ்மீர் மக்களும் இன்று பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்று திரண்டுள்ளனர். இந்து சகோதர, சகோதரிகள் மீதான தாக்குதலை காஷ்மீர் மக்கள் வன்மையாக கண்டித்துள்ளனர்.
இந்துக்களுக்கு ஆதரவாக காஷ்மீர் முஸ்லிம்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஒட்டுமொத்த காஷ்மீர்வாசிகளும் ஒன்றாக இணைந்து போராடுகின்றனர். நாம் அனைவரும் இந்தியர்கள். காஷ்மீர் முதல் அந்தமான் நிக்கோபார் வரை இந்தியாவின் புனித பூமி என்பதை உணர்ந்துள்ளனர். காஷ்மீர் மக்களின் இந்த உணர்வை மீடியாக்களும் வெளிப்படுத்த வேண்டும். காஷ்மீர் மக்களின் இந்த உணர்வுக்கு நான் தலை வணங்குகிறேன் என அவர் கூறினார்.
இதையும் படிங்க: மதுரையில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 68 பேரின் நிலை என்ன? - வெளியானது பரபரப்பு தகவல்..!