மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு பற்றி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய் சொல்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் விவகாரம் தொடர்பாக விவாதிக்க மார்ச் 5ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு 8 தொகுதிகளை இழக்க நேரிடும் என்றும், அதற்காக குரல் கொடுப்பதற்காக அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, கோவை பீளமேட்டில் நடைபெற்ற மாவட்ட பாஜக அலுவலக திறப்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். 2026ல் தமிழகத்தில் நமது ஆட்சி உருவாக போவது உறுதி. தமிழகத்தில் உருவாக போகும் நமது ஆட்சி சாதாரண ஆட்சியாக இருக்காது, புதிய யுகத்தை உருவாக்குவதாக இருக்கும். வகுப்பு வாத சிந்தனை முடிவுக்கு கொண்டு வரப்படும். தமிழகத்தில் நிலவும் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமித் ஷா போட்ட பதிவுல இதை கவனிச்சீங்களா?.... துள்ளாட்டம் போடும் அண்ணாமலை ஆதரவாளர்கள்...!

ஊழல் செய்வதில் திமுக தலைவர்கள் மாஸ்டர் டிகிரி பெற்றுள்ளதாக விமர்சித்த அமித் ஷா, மணல் கொள்ளை கூட ஆட்சியாளர்களின் முழு அதிகாரத்தோடு நடந்து கொண்டிருப்பதாக கூறினார். மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொய் கூறிவருவதாக தெரிவித்த அமித் ஷா, தமிழகத்தில் மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படாது என்றும், தென்னிந்திய மக்களுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்குமே தவிர, குறையாது என்றும் உறுதியாகக்கூறினார்.

பிரதமர் மோடி நிதி வழங்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் பொய்யான தகவலை கூறி வருகிறார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வெறும் 1.52 லட்சம் கோடி தான் வழங்கப்பட்டது. தமிழ் மக்கள் வளர்ச்சி, பண்பாட்டிற்கு உழைக்கும் பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடம் சேர்க்க வேண்டும் என்றார். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் மேல் கத்தி தொங்குகிறது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில் அமித்ஷா இவ்வாறு தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: திமுக ஆட்சியில்தான் முதன் முதலில் சிபிஎஸ்இ ஸ்கூல் வந்துச்சு.. உண்மையை உடைத்த பிஜேபி நாராயணன் ...!