உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நச்சு வாயு, பிளாஸ்டிக் பயன்பாடு, தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகை போன்ற எண்ணற்ற காரணங்களால் வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பனிப்பாறைகள் அதிக அளவில் உருகி வருதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பனிப்பாறைகள் உருகி, உருகி அந்த நீரானது கடலில் கலப்பதால் மெல்ல மெல்ல கடலின் அளவு அதிகரித்து வருகிறது. இது கடலோர நகரங்களுக்கு பெரும் எச்சரிக்கையாய் அமைகிறது. இதன் காரணமாகவே வெப்பமயமாதலை தடுக்கும் வழிமுறைகளை உலக நாடுகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.

இந்தியா, சீனா போன்ற மிகப்பெரிய நிலப்பரப்பு கொண்ட நாடுகளே புவி வெப்பமயமாவதை தடுக்க போராடிவரும் நிலையில், 4 பக்கமும் கடலால் சூழப்பட்ட உலகின் 3வது சிறிய நாடான நவ்ரு-வின் நிலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பரப்பளவில் உலகின் சிறிய நாடாக வாடிகன் சிட்டி அறியப்படுகிறது. அதற்கடுத்த இடத்தில் மொனாகோ நகரம் உள்ளது. அதற்கடுத்த இடத்தில் இருப்பது தான் நவ்ரு. தென்மேற்கு பசுபிக் கடலில் உள்ள மிகச்சிறிய தீவு நாடு தான் நவ்ரு. அதன் மொத்த பரப்பளவே 24 சதுர கிலோ மீட்டர் தான். தமிழகத்தின் தலைநகரான சென்னைதான் தமிழகத்தில் உள்ள சிறிய மாவட்டம். அப்படி இருந்துமே சென்னையின் பரப்பளவு மொத்தமாக 426 சதுர கிலோ மீட்டர். கிட்டத்தட்ட நமது சென்னையை விட 17 மடங்கு சிறிய பரப்பளவு கொண்டது தான் நவ்ரு.
இதையும் படிங்க: இந்தியர்களை பாதிக்குமா..! அதிபர் ட்ரம்ப்பின் ‘கோல்டு கார்டு’ திட்டம் என்றால் என்ன?

2022ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி நவ்ரு நாட்டின் மக்கள் தொகை 12 ஆயிரத்திற்கும் குறைவு. தற்போது அது 13 ஆயிரத்தை எட்டி இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இந்த சூழலில் தனது நாட்டு மக்களை வெப்பமயமாதலால் ஏற்படும் பிரச்னையில் இருந்து காத்துக்கொள்ள நவ்ரு நாட்டு அரசாங்கம் ஒரு நூதன வழியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, உலகின் எந்த நாட்டில் வசிப்பவராக இருந்தாலும், அவருக்கு நவ்ரு நாட்டின் குடியிரிமை வழங்கப்படும் என நவ்ரு அறிவித்துள்ளது. அதற்கு கட்டணமாக வெளிநாட்டவர் 1,05,000 டாலர் இந்திய மதிப்பில் ரூ.91 லட்சத்திற்கும் மேல் கட்டணம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்துபவர்களுக்கு கோல்டன் விசா வழங்கி வரவேற்கிறது நவ்ரு.


பசுபிக் பெருங்கடலின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், இவ்வாறு பெறப்படும் நிதியை கொண்டு நாட்டின் 90% மக்களை மேடான பகுதிக்கு மாற்றம் செய்யலாம் என நவ்ரு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மக்களை காக்க நவ்ரு அரசாங்கம் மேற்கொண்டுள்ள இந்த திட்டம் வரவெற்பை பெற்றுள்ளது. நவ்ரு நாட்டின் குடியுரிமை இருந்தால், இங்கிலாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 89 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. என்ன மக்களே கோல்டன் விசா வாங்க தயாரா?
இதையும் படிங்க: இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்த விஜய்..! இஃப்தார் நோன்பின் பின்னணி என்ன..?