ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ என்ற இயற்பெயரைக்கொண்ட கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் தனது 88வது வயதில் கடந்த 21ம் தேதி காலமானார். நுரையீரல் தொற்று, நிமோனியா காரணமாக ரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 38 நாட்கள் சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில், வாடிகனில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார்.

2013ம் ஆண்டு தொடங்கி, 12 ஆண்டுகளாக கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வழி நடத்திய போப்பின் உடல் அவர் வசித்து வந்த காசா சண்டா மார்டாவில் உள்ள தேவாலயத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த புதன் கிழமை வாடிகனில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக போப் பிரான்சிஸ் உடலுக்கு பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மேலும் இதுவரை 2.5 லட்சம் பேர் போப் பிரான்சிஸின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். உலக தலைவர்கள் பலர் போப் ஆண்டவரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: சனிக்கிழமை நடைபெறுகிறது போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு.. வாடிகன் அறிவிப்பு..!

இதனிடையே மறைந்த உலக கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் திருத்தந்தை போப் பிரான்சிஸ் உடலுக்கு ரோம் நகர் வாடிகன் சென்று அமைச்சர் சா.மு.நாசர், சட்டமன்ற உறுப்பினர் இருதயராஜ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் சென்று போப் ஆண்டவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவும் சென்று போப் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவியுடன் வாட்டிகன் நகருக்கு சென்று போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் கார்டினல்கள், பேராயர்கள், ஆயர்கள் மற்றும் பாதிரியார்கள் முன்னிலையில் இறுதிச் சடங்குப் பிரார்த்தனை நடைபெற்ற பின், கடலலையாய் திரண்ட மக்களுக்கு மத்தியில், போப் பிரான்சிஸின் விருப்பப்படியே, மரத்தால் ஆன, துத்தநாகத்தால் மூடப்பட்ட ஒரு எளிய சவப்பெட்டியில் அவரது உடல் வைக்கப்பட்டு புனித மேரி மேஜர் பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: போப் பிரான்சிஸ் மறைவு.. பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல்..!