காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். இந்த மோசமான சம்பவத்தில் 3 முதல் 5 தீவிரவாதிகள் ஈடுபட்டு இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அங்குத் துப்பாக்கிச் சூட்டை பார்த்தவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையின் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் போட்டோ மற்றும் வரைபடம் வெளியிடப்பட்டது.

இந்த பயங்கரவாத தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் மீது பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதன்படி சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, இந்தியா - பாகிஸ்தான் எல்லையாக பஞ்சாபில் அமைந்துள்ள அட்டாரி - வாகா சோதனைச் சாவடி மூடல் என்பது போன்ற முடிவுகள் இந்திய அரசால் எடுக்கப்பட்டது.
இதையடுத்து சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்த பாகிஸ்தான், இந்த செயலை போர் தொடுத்ததாகவே கருதுவோம் என தெரிவித்தது. மேலும் இந்தியாவுக்கான வான்பரப்பு மூடப்படுவதாக தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவுடனான வணிக நடவடிக்கைகளையும் நிறுத்தி உள்ளது. இதனிடையே நேற்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தான் சதி.. காஷ்மீரில் கணவனை இழந்த பெண் கண்ணீர்..!

இதில் பஹல்காம் தாக்குதல் சம்பவம் குறித்து மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்த கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன. அதில், தாக்குதல் சம்பவம் நடந்த பைசரன் புல்வெளியைத் திறக்க அனுமதி இல்லை என்றும் காவல்துறை அனுமதியின்றி சுற்றுலாப் பயணிகள் புல்வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் சம்பவம் அரங்கேறிய இடத்திற்கு நடந்து அல்லது குதிரை மூலம் மட்டும் பயணம் செய்ய முடியும் என்பதால்தான் பாதுகாப்புப் படையினர் அங்கு செல்ல தாமதம் ஏற்பட்டதாக மத்திய அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்திருந்தார்.

மேலும் தாக்குதலுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு வரை பைசரனில் இருந்து 50 கிலோமீட்டர் சுற்றளவில் எந்த தகவல் தொடர்பு சிக்னலையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தீவிரவாதிகள் எந்த தகவல் தொடர்பு சாதனத்தையும் பயன்படுத்தவில்லை என்றும் அமித் ஷா கூறியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை மேற்கொண்டார். அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் தொலைபேசியில் உரையாடியதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, தங்களது மாநிலங்களில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை அடையாளம் கண்டு, நாட்டை விட்டு வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: பைசாரன் பள்ளத்தாக்கு திறக்கப்பட்டதை பாதுகாப்பு படையினருக்கு தெரிவிக்கவில்லை.. அரசு ஒப்புதல்..!