மதிமுகவின் பொதுச்செயலாளரான வைகோவின் மகன் துரை வைகோ கட்சியின் சாதாரண தொண்டவராகவே இருந்து வந்தார். அதன்பிறகு கடந்த ஆண்டு நடந்த மதிமுகவின் 29ஆவது பொதுக்கூட்டத்தில் கட்சியின் முதன்மைச் செயலாளராக துரை வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதிருப்தி அடைந்து கட்சியிலிருந்து வெளியேறினர்.
மேலும் துரை வைகோவின் ஆதரவாளர்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தது. திருச்சியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மல்லை சத்யாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானத்தையும் நிறைவேற்றினார்கள். பல்வேறு மாவட்டங்களில் மல்லை சத்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. இந்த விவகாரத்தில் தலையிட்ட கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தீர்மானம் ஏதும் நிறைவேற்றக்கூடாது என்றும் ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறும் நிர்வாகக்குழு கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கலாம் என்றும் கூறி இருந்தார்.

இதனிடையே கட்சியின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகுவதாக நேற்று திடீரென அறிவித்திருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வைகோ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், துரை வைகோவை சமாதானப்படுத்த முயற்சித்தனர். இருப்பினும் தான் விலகுவதாக எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக துரை வைகோ தெரிவித்து இருந்தார்.இந்த நிலையில் நிர்வாகக்குழு கூட்டம் கூடியதும் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துரை வைகோ கட்சி பதவியில் தொடர வேண்டும் என மதிமுக நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: நான் ராஜினாமா செய்கிறேன்..! மதிமுக கூட்டத்தில் மல்லை சத்யா பரபரப்பு பேச்சு..!

பெரும்பாலான நிர்வாகிகள் துரை வைகோவின் விலகலை ஏற்காததால் கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. மேலும் துரை வைகோவின் விலகல் கடிதத்தை ஏற்க கூடாது என்றும் கட்சி பொறுப்பில் அவர் நீடிக்க வேண்டும் எனவும் நிர்வாகிகள் ஒருமித்த குரலில் வலியுறுத்தியதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் மல்லை சத்யாவிற்கு நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 60 மாவட்டச் செயலாளர்கள் உள்ள நிலையில், 40 மாவட்ட நிர்வாகிகள் துரை வைகோவிற்கு ஆதரவாக பேசியுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நிர்வாக குழு கூட்டத்தில் துரை வைகோவிற்கு ஆதரவு வலுத்த நிலையில், நிர்வாகிகள் மற்றும் தலைமையின் வலியுறுத்தலின் பேரில் தனது ராஜினாமா முடிவை துரை வைகோ வாபஸ் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சற்று நேரத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மேடையில் துரை வைகோ.. இறுதி சீட்டில் மல்லை சத்யா.. நிர்வாகக்குழு கூட்டத்தில் நடப்பது என்ன?