பாமகவில் கடந்த சில நாட்களாக உட்கட்சிபூசல் இருந்து வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த 10 ஆம் தேதியன்று கட்சியின் தலைவராகவும், நிறுவனராகவும் தானே பொறுப்பு வகிக்க உள்ளதாக அறிவித்தார். மேலும் அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக மட்டும் இருப்பார் என்றும் தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இதனிடையே அன்புமணி, தானே தலைவராக செயல்படுவேன் என்று அறிக்கை வெளியிட்டார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை கட்சியின் முக்கிய நிர்வாகிகள், குடும்பத்தினர் சந்தித்துப் பேசினர்.

மேலும் பாமக இளைஞரணி தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட முகுந்தன், அன்புமணியை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, பாமகவில் நடப்பது எங்களுடைய உட்கட்சி விவகாரம், எங்களுக்குள் நாங்கள் பேசிக்கொள்வோம். ஐயா ராமதாஸ் வழிகாட்டுதலுடன், அவருடைய கொள்கையை நிலைநாட்ட, பாமகவை ஒருக்கட்டத்தில் ஆளும்கட்சியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கடுமையாக அனைவரும் உழைப்போம் என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: “அரசியல் அரைவேக்காடு” திலகபாமா கட்சியை விட்டு வெளியேற வேண்டும்... பாமக பொதுச்செயலாளர் அதிரடி...!

இதுஒருபுறம் இருக்க மறுபுறம் வரும் மே 11 ஆம் தேதி மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் பாமக சித்திரை முழுநிலவு மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அன்புமணி ராமதாஸ் முன்னின்று மேற்கொண்டு வருகிறார். இந்த மாநாட்டில் ராமதாஸும் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. கட்சியில் ஏற்கனவே மோதல்போக்கு நிலவி வரும் நிலையில் இருவரும் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்தது. இதனை தெளிவுப்படுத்தும் விதமாக பாமகவின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி ஒரு தகவலை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், மாமல்லபுரத்தில் மே 11ஆம் தேதி நடக்க உள்ள பாமக மாநாட்டில் ராமதாஸ், அன்புமணி இருவருமே கலந்துகொள்வார்கள். இரண்டு தலைவர்களிடமும் பேசிக் கொண்டிருக்கிறேன். விரைவில் சுமூகமான நிலை ஏற்படும். ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே சிறு சலசலப்பு இருந்தது. அது தற்போது சரியாகிவிட்டது. அனைத்துக் கட்சியிலும் சலசலப்பு என்பது சாதாரணம் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் பாமகவில் இருந்து வந்த மோதல் போக்கு சரியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு ராமதாஸ் மரியாதை..! பாமக தொண்டர்கள் முழக்கம்..!