ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இதனை அடுத்து, சவுதி அரேபியா சென்றிருந்த பிரதமர் மோடி அவசர அவசரமாக சுற்றுப் பயணத்தை பாதியில் முடித்து பாதியில் நாடு திரும்பினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் ஆலோசித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உடனே ஸ்ரீநகர் சென்றார். தாக்குதல் நடந்த பஹல்காமில் நேரில் ஆய்வு செய்தார். ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பாகிஸ்தானுடனான உறவை முற்றிலும் முறித்துக் கொள்வதாக அரசு முடிவெடுத்தது.

காஷ்மீரில் படைகள் குவிக்கப்பட்டு, பயங்கரவாதிகளை தப்ப விடாமல் தடுக்கவும், மேற்கொண்டு தாக்குதல் நடக்காமல் இருக்கவும் ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. பஞ்சாப் மாநிலம் அடாரியில் இந்தியா - பாக்., எல்லை மூடப்பட்டது. இரு நாட்டினர் அவரவர் நாடுகளுக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பஹல்காமில் நடந்தது நாட்டின் ஆன்மா மீதான தாக்குதல். இதில் ஈடுபட்டோர், அதன் பின்னணியில் இருப்போர் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பதிலடி இருக்கும் என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளும் தாக்குதலுக்கு தயாராகி வரும் நிலையில், காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்திய கிராமங்களில் அந்நாட்டு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதையும் படிங்க: இனி தண்ணீ தர மாட்டோம்..! சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு.. பாகிஸ்தானுக்கு இந்தியா அதிகாரப்பூர்வ கடிதம்..!

இன்று அதிகாலை நடந்த தாக்குதலுக்கு நம் ராணுவமும் தக்க பதிலடி தந்தது. எனினும், இதில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என ராணுவம் கூறியுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், நம் ராணுவ தளபதி உபேந்திர திவேதி இன்று ஸ்ரீநகர் சென்றார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 15 படைப்பிரிவுகளின் கமாண்டர்களை சந்தித்து பேசினார்.
பஹல்காம் தாக்குதல், அங்கு தற்போதைய நிலை, அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, எல்லையில் நிலவும் பதற்றம் உள்ளிட்டவை குறித்து, ராணுவ அதிகாரிகளுடன் தளபதி திவேதி ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா - ராணுவ தளபதி திவேதி இடையே சந்திப்பு நிகழ்ந்தது. காஷ்மீர் நிலவரம் குறித்து கவர்னர் சின்ஹாவும் ராணுவ தளபதியிடம் விளக்கினார்.

அடுத்து மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசித்தனர். பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானோர் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அமைதியை நிலைநாட்டவும் ராணும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அரசு நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும், கவர்னர் சின்ஹா கூறினார்.
பஹல்காம் தாக்குதலை அடுத்து இரு நாட்டு எல்லையில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், ராணுவ தளபதியில் காஷ்மீர் பயணம் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது. இரு நாட்டு படைகளும் எல்லையில் தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தொடரும் துப்பாக்கி சப்தம்.. எல்லையில் மீண்டும் வெடித்தது மோதல்.. பந்திபோராவில் பரபரப்பு..!