ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் என முக்கிய பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதன் எதிரொலியாக பாக்., உடனான துாதரக உறவு துண்டிப்பு, சிந்து நதி நீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து என அடுத்தடுத்த உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்து வருகிறது. ராணுவ தளபதி திவேதி ஸ்ரீநகர் சென்று கள நிலவரம் குறித்து ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய 2 பேரைக் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக, சந்தேகப்படும் பயங்கரவாதிகளின் வீடுகளை பாதுகாப்பு படையினர் இடித்து தரைமட்டமாக்கி வருகின்றனர். ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் லஷ்கர்-இ-தொய்பா மூத்த தளபதி உட்பட 5 பேரின் வீடுகளை பாதுகாப்பு படையினர் இடித்து தள்ளினர். பயங்கரவாதிகளுக்கு உதவிய மேலும் 2 பேரின் வீடுகளை ராணுவம் இடித்து தகர்த்தது. இரண்டு நாட்களில் பயங்கரவாதிகள் 9 பேரின் வீடுகளை இடித்து தரைமட்டம் ஆக்கி பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பயங்கரவாதிகள் தாக்குதல்.. இஸ்ரேலை போல பழிவாங்குவோம்..! பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை..!


அந்த வகையில், ஷோபியனின் சோட்டிபோரா கிராமத்தில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு கமாண்டர் ஷாஹித் வீடு இடிக்கப்பட்டன. ஏற்கனவே, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த அடில் ஹுசேன் தோகர் மற்றும் ஆசிப் ஷேக் ஆகியோர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இவர்களில், தோகர், அனந்த்நாக் மாவட்டம்; ஷேக், புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குப்வாரா மாவட்டம், கலாரூஸில், தற்போது பாகிஸ்தானில் இருப்பதாக நம்பப்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி பரூக் அகமதுவின் வீடு பாதுகாப்புப் படையினரால் இடித்துத் தள்ளப்பட்டது. ஷோபியன் மாவட்டத்தில் பயங்கரவாதி முகமது ஷபியின் மகன் அட்னான் சபி வீடு இடிக்கப்பட்டது.

பந்திப்பேராவில் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பயங்கரவாதியான ஜமீல் அகமது ஷீர் வீடு இடிக்கப்பட்டது. புல்வாமா மாவட்டம் காசிபோரா ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பயங்கரவாதி அமீர் நசீர் வானியின் வீடு இடிக்கப்பட்டது. ஷோபியனின் சோட்டிபோரா கிராமத்தில், லஷ்கர்-இ-தொய்பா தளபதி ஷாஹித் அகமது குட்டேவின் வீடு வெடி வைத்து தகர்க்கப்பட்டது. குல்காம் பகுதியில் பயங்கரவாதி ஜாஹித் அகமதுவின் வீடு இடிக்கப்பட்டது. புல்வாமா பகுதியில், அஹ்சன் உல் ஹக்கின் வீடு இடிக்கப்பட்டது.
புல்வாமாவில் பயங்கரவாதிகள் அகமது ஷேக், ஹரிஸ் அகமது ஆகிய இரண்டு பேரின் வீடுகள் இடிக்கப்பட்டன. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உதவியவர்களை குறிவைத்து, உளவுத்துறை நிறுவனங்கள் தயாரித்த பயங்கரவாதிகளின் 14 பேர் பெயர் பட்டியலை உளவுத்துறை வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன. ஏற்கனவே ஐந்து பயங்கரவாதிகளின் வீடுகள் தகர்க்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: காஷ்மீர் இந்தியாவோடது.. விஜய் தேவரகொண்டா அதிரடி..! கைகட்டி வேடிக்கை பார்த்த சூர்யா..!