இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 14 நாடுகளின் குடிமக்களுக்கு விசா வழங்குவதை சவுதி அரேபியா தற்காலிகமாக தடை செய்துள்ளது. இது ஜூன் நடுப்பகுதி வரை தொடரும். வணிக, குடும்ப வருகை விசாக்களின் ஒப்புதலைப் பாதிக்கும். ஹஜ் யாத்திரைக்கான நேரம் ஒத்துப்போவதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த சவுதி அரேபிய அரசு இந்தத் தடையை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தடை ஜூன் மாத நடுப்பகுதி வரை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஹஜ் யாத்திரை முடியும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும்.

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், எகிப்து, இந்தோனேசியா, ஈராக், நைஜீரியா, ஜோர்டான், அல்ஜீரியா, சூடான், எத்தியோப்பியா, துனிசியா, ஏமன் மற்றும் மொராக்கோ உள்ளிட்ட 14 நாடுகளுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முறையான பதிவு இல்லாமல் தனிநபர்கள் ஹஜ் செய்ய முயற்சிப்பதைத் தடுக்க சவுதி அரேபிய அரசு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: உக்ரைன் போர் நிறுத்தம்: 12 மணி நேரம் நீடித்த அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை: ரஷ்யாவின் முடிவு இதுதான்..!

இந்த முடிவின் முக்கிய நோக்கம், கடந்த ஆண்டு ஹஜ் துயர சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுப்பதே. கடந்த ஆண்டு கடுமையான வெப்பம், பதிவு செய்யப்படாத ஏராளமான யாத்ரீகர்கள் இருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் குறைந்தது 1,200 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர்.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இந்த ஆண்டு விசா விதிகளை கடுமையாக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதை அடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், உம்ரா விசாக்கள் வைத்திருப்பவர்கள் ஏப்ரல் 13 வரை சவுதி அரேபியாவிற்குள் நுழையலாம். பல வெளிநாட்டினர் உம்ரா, விசிட் விசாக்களில் சவுதி அரேபியாவிற்கு வந்து நீண்ட காலம் நாட்டில் தங்கியிருப்பதால் இந்தத் தடை தேவைப்பட்டது என்று கூறப்படுகிறது. இதே மக்கள் பின்னர் மெக்காவில் ஹஜ்ஜில் சட்டவிரோதமாக பங்கேற்கிறார்கள். அங்கு கூட்டம் அதிகரித்து குழப்பம் ஏற்படுகிறது.
இதையும் படிங்க: 200 மசூதிகளுக்கு பதில் பள்ளி- மருத்துவமனை கட்டிக்கொடுங்க: சவுதியிடம் மறுத்த புர்கினா அதிபர்..!