இந்தியாவின் சொர்கபூமியாகக் கருதப்படுவது காஷ்மீர். இதன் ஒரு பகுதியாக அனந்தநாக் மாவட்டத்தில் பஹல்காம் உள்ளது. பஹல்காம் குன்றில் மொத்தம் நான்கு சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. பனி மூடிய மலைகள், நீல ஏரிகள், பசுமை மற்றும் அமைதியான சூழல், காஷ்மீரை சொர்க்க பூமியை போல் உணர வைக்கிறது. காஷ்மீரின் பஹல்காமில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் புல்வெளி பகுதி பைசரன் பள்ளத்தாக்கு.
மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் இந்த இடத்தை கடந்த 22ம் தேதி சுற்றுலா பயணிகள் ரசித்துக் கொண்டிருந்தனர். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அங்கு வந்த பயங்கரவாதிகள் கண் இமைக்கும் நேரத்தில் சுமார் ஆயிரம் சுற்றுலா பயணிகளை வளைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 2 வெளிநாட்டவர் உட்பட 26 உயிர்கள் பரிதாபமாகப் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.

அந்த பகுதி முழுவதுமாக மரண ஓலம் கேட்டது. விடுமுறை, ஹனிமூன், திருமண நாள் என பல தருணங்களை கொண்டாட வந்தவர்கள், கண்ணீரும் கதறலுமாக வீடு திரும்பினர்.இந்த தாக்குதலை தொடர்ந்து பஹல்காமில் இருந்து சுற்றுலா பயணிகள் வெளியேறினர்.இந்த தாக்குதல் காஷ்மீருக்கு வரும் சுற்றுலா பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா வர திட்டமிட்டிருந்த சுற்றுலா பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்துள்ளனர். இவர்கள் முன்கூட்டியே செய்திருந்த 12 லட்சத்துக்கும் அதிகமான தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களின் பதிவுகளை ரத்து செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பயங்கரவாதிகள் தாக்குதல்.. இஸ்ரேலை போல பழிவாங்குவோம்..! பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை..!

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு, அந்த யூனியன் பிரதேசத்தை கரோனா பரவல் காலச் சூழலுக்கு தள்ளி விட்டது. காஷ்மீரில் வழக்கமாக பொதுமக்கள் மீது குறிவைப்பதை தீவிரவாதிகள் தவிர்ப்பதுண்டு. ஆனால், முதன்முறையாகச் சுற்றுலாவாசிகளை மட்டும் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பஹல்காமில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற விதம் காஷ்மீரின் சுற்றுலாத் துறையில் மிக மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீருக்கான பயணங்களை ரத்து செய்யவோ அல்லது ஒத்திவைக்கவோ பயண முகவர்களுக்கு தொடர்ந்து அழைப்புகள் வருகின்றன. வாடகை வாகனங்களின் நிறுவனங்களுக்கும் இதேநிலை தான் தொடர்ந்தது.

பஹல்காமின் பயங்கரவாதச் செயலால், அடுத்த 4-5 மாதங்களுக்கு யாரும் காஷ்மீருக்குச் செல்ல விரும்ப மாட்டார்கள் என்ற கருத்து அம்மாநிலத்தவரிடம் நிலவியது. ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா முன் பதிவு செய்திருந்தவர்களில் 90% சதவீதத்தினர் திரும்ப பெற்றதால் காஷ்மீர் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின.
இது காஷ்மீரில் சுற்றுலாவை வாழ்வாதாரமாக கொண்ட மக்களை கவலையில் ஆழ்த்தியது. நாட்டையே உலுக்கிய தாக்குதல் நடந்து 4 நாட்கள் கடந்துள்ள நிலையில், காஷ்மீர் சுற்றுலா மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. அதுவும் தாக்குதல் நடந்த பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீண்டும் வர தொடங்கி உள்ளனர்.

பஹல்காமில் உள்ள லிடர் நதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். கடந்த வாரம் இருந்த கூட்டத்துடன் ஒப்பிடும்போது இது குறைவு தான் என்றாலும், சுற்றுலாவை நம்பி உள்ள உள்ளூர் மக்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.தங்களுக்கு பாதுகாப்பும், ஆதரவும் அளித்த பாதுகாப்பு படையினர், உள்ளூர் மக்களுக்கு சுற்றுலா பயணிகள் நன்றி தெரிவித்தனர்.


பாதுகாப்பு படையினர் அதிக எண்ணிக்கையில் இருப்பது அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை தருவதாகவும் கூறினர்.இதேபோல் ஸ்ரீநகர் உட்பட காஷ்மீரின் பல்வேறு சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் வர தொடங்கி உள்ளனர். உள்ளூர் மக்களின் அரவணைப்பு மற்றும் ஆதரவை அனுபவித்து, தாங்கள் பாதுகாப்பாகவும் வரவேற்கப்படுவதாகவும் கூறுகின்றனர். பிரபலமான தால் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மீண்டும் வருவதால் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: காஷ்மீர் இந்தியாவோடது.. விஜய் தேவரகொண்டா அதிரடி..! கைகட்டி வேடிக்கை பார்த்த சூர்யா..!