காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர்.

இந்த மோசமான சம்பவத்தில் 3 முதல் 5 தீவிரவாதிகள் ஈடுபட்டு இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த என்ஏஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். அங்குத் துப்பாக்கிச் சூட்டை பார்த்தவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையின் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் போட்டோ மற்றும் வரைபடம் நேற்று வெளியிடப்பட்டது. இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்து 2 நாட்கள் கடந்த நிலையில் தற்போது அமெரிக்கா தனது குடிமக்களிடம் தீவிரவாதத் தாக்குதல் காரணமாகவும் காஷ்மீருக்கு யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாடு கடத்தும் முடிவு..! அமெரிக்க அரசுக்கு எதிராக இந்திய மாணவர் உள்பட 4 பேர் நீதிமன்றத்தில் வழக்கு..!

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் திடீர் வன்முறை காரணமாக அமைதியின்மை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் அங்கு யாரும் பயணம் செய்ய வேண்டாம். இதர பகுதிகளில் வன்முறை அவ்வப்போது நிகழ்கிறது. மேலும் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகிலும் தாக்குதல்கள் தொடர்ந்து நடக்கிறது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள சுற்றுலாத் தலங்களான ஸ்ரீநகர், குல்மார்க் மற்றும் பஹல்காமிலும் இது போன்ற தாக்குதல்கள் நடக்கிறது. இது மட்டுமின்றி, ஆயுத மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் இந்திய- பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கிலோமீட்டருக்குள் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அவர்களை மண்ணில் புதைக்கும் நேரம் வந்துவிட்டது... பாகிஸ்தானுக்கு மோடி ஆவேசம்..!