கோவில்பட்டியில் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலக திறப்பு விழாவில் கனிமொழி எம்பி அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தமிழக முதல்வர், நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

தூத்துக்குடி நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும், கோவில்பட்டியை தலைமை இடமாகக் கொண்டு புதிய நெடுஞ்சாலைத்துறை கோட்டம் உருவாக்க வேண்டும் என்பது கோவில்பட்டி பகுதி மக்கள் நீண்ட கால கோரிக்கை. இது குறித்து ஏற்கனவே சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர். அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவுறும் என்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்த நெடுஞ்சாலை துறை கோட்டத்தை இரண்டாக பிரித்து கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு நெடுஞ்சாலைத்துறை கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கோட்ட பொறியாளர் அலுவலகம் கோவில்பட்டி பயணியர் விடுதி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கூட்டிக் கழிச்சி பாருங்க கணக்கு சரியா வரும்.. தப்புக் கணக்கு போடுவதாக கூறிய தங்கம் தென்னரசுக்கு எஸ்.பி. வேலுமணி பதிலடி,!!
விழாவில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ பேசுகையில், கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு நெடுஞ்சாலை கோட்டம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது. இதனை நிறைவேற்றிய தமிழக முதல்வர் நெடுஞ்சாலை துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இது குறித்து கடந்த வாரம் சட்டமன்றத்தில் பேசிய போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்த நிலையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டதை வரவேற்கிறேன் என்றார்.

கடம்பூர் ராஜூ இப்படி அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தது அதிமுகவினர் இடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாஜக - அதிமுக கூட்டணி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில், இது நமக்குத் தேவையா? என்ற பேச்சு கிளம்பியுள்ளது.
இதையும் படிங்க: ஆளுநருக்கு ஆப்பு... உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு...!