அமைச்சர்கள் பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 6வது முறையாக திமுக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு ஒதுக்கப்பட்ட இலாகா அமைச்சர்கள் பொறுப்பேற்க உள்ளனர்.
வனத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, பொதுக்கூட்டம் ஒன்றில், விலை மாதருக்கும், வாடிக்கையாளருக்கும் நடந்த உரையாடல் எனக்கூறி, சைவ, வைணவ சமயங்களின் புனித குறியீடுகளை ஒப்பிட்டு மிகவும் ஆபாசமாக பேசினார். அதனால், அவரை பதவியில் இருந்து நீக்கக்கோரி, உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

அதேபோல, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜி, மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனால், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி, அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா’’ என்று கேள்வி எழுப்பியது.
இதையும் படிங்க: சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்... திமுக அமைச்சர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!
அதனால், அவர் அமைச்சர் பதவியில் தொடர்ந்தால், ஜாமின் ரத்தாகும் சூழ்நிலை உருவானது. இவ்விரு அமைச்சர்களாலும், தமிழக அரசுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டது. அதை தவிர்க்க, இருவரும் ராஜினாமா செய்ய முதல்வர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. அதை ஏற்று அவர்கள் இருவரும் முதல்வரிடம் ராஜினாமா கடிதம் வழங்கினர்.
அவர்களின் ராஜினாவை ஏற்ற முதல்வர் ஸ்டாலின், அவற்றை ஆளுநருக்கு பரிந்துரை செய்தார். மூன்று அமைச்சர்களின் துறைகளை மாற்றம் செய்தும், அமைச்சரவையில் மீண்டும் மனோ தங்கராஜை சேர்க்க அறிவுறுத்தியும், முதல்வர் அளித்த பரிந்துரையை கவர்னர் ஏற்றார்.

முதல்வர் பரிந்துரையின்படி, செந்தில் பாலாஜி வசமிருந்த மின்சாரத்துறை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடமும், செந்தில் பாலாஜி வசமிருந்த மது விலக்கு ஆயத்தீர்வை துறை, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியிடமும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், வனம் மற்றும் கதர்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வசமிருந்த பால்வளத்துறை, புதிதாக அமைச்சராகும் மனோ தங்கராஜிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. ஏற்கனவே, பால்வளத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட, பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ., மனோ தங்கராஜ், மீண்டும் அதே துறைக்கு அமைச்சராக்கப்படுகிறார்.
இன்று மாலை 6:00 மணிக்கு, கவர்னர் மாளிகையில் நடக்கும் நிகழ்வில், அமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருக்கு கவர்னர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என, கவர்னர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை மாற்றத்தில், ஏற்கனவே அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட, கிறிஸ்துவ நாடாரான மனோ தங்கராஜுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த முத்துசாமி, வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சிவசங்கர் ஆகியோருக்கு, கூடுதல் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. யாதவர் சமூகத்தைச் சேர்ந்த ராஜ கண்ணப்பனுக்கு முக்கியத்துவம் அளிக்க, வனத்துறை வழங்கப்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக சர்ச்சையாக பேசி வருவதை வாடிக்கையாகக் கொண்ட துரைமுருகன், மாற்றுத்திறனாளிகளைப் பற்றி இழிவாகப் பேசியது திமுக தலைமைக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. திடீரென சுதாரித்துக் கொண்ட துரைமுருகன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
கே.என்.நேரு ஆகியோர் மீதும் அமலாக்கத்துறை விசாரணை நடந்து வருவதால், இவர்கள் இருவர் பதவிக்கும் சிக்கல் இருப்பதாக கூறுகிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுடைய தொழில் நிறுவனங்களிலும், மகன் அருண் நேரு தொழில் நிறுவனத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியல் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளது அவரது பதவிக்கு சிக்கலை ஏற்படுத்தக் கூடும் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.
இதையும் படிங்க: நித்யாவை பெருமைப்படுத்தி.. இ.பி.எஸை இழிவாக்கி.. கடுப்பில் 'சாட்டை'யை தூக்கி எறிந்த சீமான்..!