காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல் நடத்தியபோது, அசாம் பேராசிரியர் ஒருவர் தீவிரவாதிகளிடம் இருந்து குறிப்பிட்ட வார்த்தையைக் கூறி தப்பித்துள்ளார்.

அசாம் மாநிலம் பாரக் பள்ளதாக்கில் சில்சார் நகரைச் சேர்ந்தவர் தேபாஷிஸ் பட்டாச்சார்யா. இவரின் மனைவி மதுமிதா தாஸ் பட்டாச்சார்யா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தேபாஷிஸ் பட்டாச்சார்யா அசாம் பல்கலைக்கழகத்தில், வங்காளமொழித் துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார்.
இதையும் படிங்க: ‘தீவிரவாதத்துக்கு மதம் இருக்கிறது, ஜிஹாத்துக்கு நாம் தொடர்ந்து நிதியளிக்கிறோம்’: பாஜக எம்எல்ஏ காட்டம்..!
தேபாஷிஸ் பட்டாச்சார்யாவுக்கு நீண்ட காலமாகவே ஜம்மு காஷ்மீருக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதையடுத்து, தேபாஷிஸ் தனது குடும்பத்தாருடன் பஹல்காம் பகுதிக்கு சுற்றுலாச் சென்றார். ஆனால் இவர் அங்கு சென்றபோதுதான் தீவிரவாதிகள் சுற்றுலாப்பயணிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு 26 பேரைக் கொலை செய்தனர்.

இந்த சம்பவத்தில் தீவிரவாதிகளின் துப்பாக்கி முனையில் சிக்கிய தேபாஷிஸ், அவர்களிடம் இருந்து நைசாக புனிதகுர்ஆனின் சில வார்த்தைகளைக் கூறியும், “லாயிலாஹ் இல்லல்லாஹ், முஹம்மதுன் ரசூலுல்லாஹ்” என்ற கலீமாவைக் கூறி உயிர் பிழைத்துள்ளார். தீவிரவாதிகளிடம் இருந்து தப்பித்து ஸ்ரீநகருக்கு வந்த பின்புதான் சொர்க்கத்துக்கு வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டதாக தேபாஷிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து பேராசிரியர் தேபாஷிஸ் கூறுகையில் “நான் என் குடும்பத்தாருடன் மொபைல் போனில் செல்பி, புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டது. முதலில் குரங்குகளை விரட்டுவதற்காக வனத்துறையினர் பட்டாசு வெடிக்கிறார்கள் என்று கடைக்காரர்கள் தெரிவதி்தனர். ஆனால், தொலைவில் நின்று பார்த்தபோது, சுற்றுலாப் பயணிகளை நோக்கி துப்பாக்கியால் சுடுவதும், அவர்கள் சுருண்டு ரத்தவெள்ளத்தில் விழுவதையும் பார்த்தபோது எனக்கு இதயத்துடிப்பு எகிறது.

சில நிமிடங்களில் நான் இருந்த இடத்தைச் சுற்றி ஏராளமான உடல்கள் கீழே கிடந்தன. இதனால் என் குடும்பத்தாரைப் பாதுகாத்து மரத்துக்கு பின்னால் ஒளிந்திருந்தேன். அப்போது ஒருவர் துப்பாக்கியுடன் ஓடிவந்து என் அருகே நின்றார். எனக்கு பதற்றமாகவும், வியர்த்துக்கொட்டியது. மற்றொரு நபர் கையில் துப்பாக்கியுடனும் முகத்தை துண்டால் மூடி எனக்கு பின்னால் நின்றிருந்தார்.
அப்போது நான் தீவிரவாதிகளைப் பார்த்து, “லாயிலாஹ் இல்லல்லாஹ், முஹம்மதுன் ரசூலுல்லாஹ்” என்ற வாசகத்தை என்னைச் சுற்றியிருந்தவர்கள் கூறியதைக் கேட்டு நானும் கூறினேன். என் பக்கத்தில் வந்த தீவிரவாதி சத்தமாகக் கூறு என்றார், அதற்கு நான் சத்தமாக “லாயிலாஹ் இல்லல்லாஹ், முஹம்மதுன் ரசூலுல்லாஹ்” என்று தெரிவித்தேன். இதைக் கேட்ட தீவிரவாதி என் தலையில் துப்பாக்கியால் அடித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

இந்த வார்த்தையின் அர்த்தம் யாதெனில் ‘உண்மையில் வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை’ என்பதாகும். இதைக் கேட்டபின் தீவிரவாதிகள் அங்கிருந்து சென்றனர். என் அருகே தீவிரவாதிகள் நின்றிருந்தபோது, 15 ஷாட்கள் வரை சுட்டனர்.
இந்த இடத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக நான், என் குடும்பத்தார், சில சுற்றுலாப்பயணிகள் சிலர் அங்கிருந்து மலைப்பகுதியை நோக்கி நடந்தோம். 2 மணிநேரம் யாரும் இல்லாத இடத்தில் தங்கினோம். அப்பகுதியாகச் சென்ற ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், எங்களுக்கு உதவி செய்து, ஒரு வாகனம் மூலம் எங்களை ஸ்ரீநகர் செல்ல ஏற்பாடு செய்தார்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்.. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்.. உமர் அப்துல்லா அறிவிப்பு..!