சென்னை மின்ட் பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள். இவருக்கு வயது 61. இவர் மீன்பாடி வண்டியில் இளநீர்களை போட்டு எடுத்து சென்று விற்பனை செய்து வருகிறார். மேலும் மீன்பாடி வண்டி ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். நேற்று மதியம் 2 மணி அளவில் கலியபெருமாள், மின்ட் தெருவில் இருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த நபர் கலியபெருமாளுடன் நைசாக பேச்சு கொடுத்டு உள்ளார். பெரம்பூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியிலிருந்து பீரோவை ஏற்றி வர வேண்டும்.. எவ்வளவு கேப்பீர்கள் என பேரம் பேசி உள்ளார். பின்னர் கலியபெருமாள் சொன்ன விலைக்கே ஒப்புக்கொண்ட அந்த நபர், கலியபெருமாளை அழைத்துச் சென்றுள்ளார்.

அதன் பிறகு பெரம்பூர் பட்டேல் சாலை வந்த போது, திடீரென கலியபெருமாள் மீது தாக்குதல் நடத்திய அந்த நபர், கலியபெருமாள் வைத்திருந்த நான்காயிரம் ரூபாய் பணத்தை அடித்து பிடுங்கினார். அவரது மீன்பாடி வண்டியையும் எடுத்துச் சென்று விட்டார். கலியபெருமாள் அழுதபடி கெஞ்சியும் அந்த நபர் இரக்கம் காட்டவில்லை.
நம்ப வைத்து அழைத்து வந்து, தன்னிடம் இருந்த பணத்தையும், தனது வாழ்வாதரமான மீன்பாடி வண்டியையும் பிடுங்கி கொண்டு செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் கலியபெருமாள் புகார் அளித்தார்.
இதையும் படிங்க: ஃபீலிங்க்ஸை புரிஞ்சுக்க மாட்றாங்க.. கண்டித்த தாத்தா, பாட்டி... 17 வயது சிறுவன் விபரீத முடிவு..!

செம்பியம் குற்றப்பிரிவு போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் செம்பியம் பகுதியில் உள்ள பல்வேறு சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது நேற்று இரவு வண்ணாரப்பேட்டை கீரைத்தோட்டம் போஜர் நகர் பகுதியைச் சேர்ந்த 37 வயதான ஷேக் அய்யூப் என்ற நபர் மீன்பாடி வண்டியுடன் சுற்றித் திரிந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது கைது செய்தனர். ஏற்கனவே இவர் மீது ஐந்து குற்ற வழக்குகள் இருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து இவரை செம்பியம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் மீன்பாடி வண்டி ஓட்டும் வயதான நபர்களை குறி வைத்து இவர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், அந்த வகையில் இவர் செம்பியம் திருவிக நகர் கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 15க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து மீன்பாடி வண்டிகளை வாங்கி அதனை திருப்பி தராமல் கோயம்பேடு பகுதிக்கு கொண்டு சென்று விற்பனை செய்ததும் தெரிந்தது.
மீன்பாடி வண்டிகளை 3000 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாய் வரை விற்றுள்ளார் சேக் அய்யூப். இதனையடுத்து கோயம்பேடு பகுதிக்குச் சென்ற செம்பியம் போலீசார் இவர் விற்பனை செய்த 11 மீன்பாடி வண்டிகளை பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து ஷேக் அய்யூப் மீது வழக்கு பதிவு செய்த செம்பியம் குற்றப்பிரிவு போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் பயங்கரம்.. போதை மாத்திரை விற்பனை அமோகம்.. கடத்தல்காரர்களை தட்டிதூக்கிய போலீஸ்..!