அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் போது துணை முதல்வர் உதயநிதியின் மகன் இன்பநிதி உடன் வந்த நண்பர்களை மேடையில் அமரவைப்பதற்காக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை அமைச்சர் மூர்த்தி எழுந்து நிற்க வைத்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. முதல்வரின் பேரனுக்காக அரசு அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் என அனைவரும் எழுந்து நிற்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள நெட்டிசன்கள், இது என்ன மன்னர் ஆட்சியா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நேற்று அலங்காநல்லூர் சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பிய நிலையில் ஆட்சியர் சங்கீதாவே செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அதில், “தன்னை யாரும் எழுந்து நிற்க கட்டாயப்படுத்தவில்லை என்றும், அமைச்சர் நிற்கிறார் என்பதால் முறைப்படி நானும் எழுந்து நின்றேன்” என்றும் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் அமைச்சர் மூர்த்தியின் செயலை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: அது எடப்பாடியாரின் கடிதமா..? பாலியல் ரீதியாக அட்டாக் செய்யப்படும் காயத்ரி ரகுராம்..! விடாமல் துரத்தும் பாஜக வார் ரூம்..!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 108ஆவது பிறந்தநாளையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார், “ஜல்லிக்கட்டு என்றாலே காளைகள் தான் ட்ரெண்டாகும், ஆனால் இன்று தேவையில்லாதவை எல்லாம் ட்ரெண்டாகிறது. ஸ்டாலினின் அருமை மைந்தனாகிய உதயநிதியும், அவருடைய அருமை மைந்தனான இன்பநிதியும் மற்றும் அவர்களது நண்பர்களும் அமருவதற்காக இப்படி கலெக்டரை நிற்க வைக்கலாமா?.மாவட்ட ஆட்சியர் சங்கீதா அளித்த பேட்டி கூட திமுக அரசுக்கு பயந்து கொடுக்கப்பட்டதே. உண்மையானது அல்ல” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், மன்னர் ஆட்சியின் சர்வதிகாரம் தமிழகத்தில் தலைத்தூக்கியுள்ளது என்பதற்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விவகாரம் அமைந்துள்ளது. உதயநிதி துணை முதல்வர் என்பதற்காக பொன்னாடை அணிவிக்கப்பட்டது. ஆனால் இன்பநிதிக்கு சால்வை அணிவிக்க வேண்டிய கட்டாயம் அமைச்சர் மூர்த்திக்கு ஏன் ஏற்பட்டது?, உண்மையிலேயே கேமரா மட்டும் இல்லை என்றால் அமைச்சர் மூர்த்தி இன்பநிதி கால் கூட விழுந்திருப்பார். ஸ்டாலின் மாடல் ஆட்சியில் அறிவற்றவர்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: குடும்ப ஆட்சியை விரட்ட காத்திருக்கும் மக்கள்.. விரைவில் அதிமுக ஆட்சி.. கடிதம் எழுதிய ஈபிஎஸ்!