மத்திய அரசு, தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு விடுவிக்க வேண்டிய 2,152 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க மறுத்துவருகிறது. இந்த நிதியை விடுவிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு தொடர்ந்து கோரி வருகிறது.

மத்திய அரசின் மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு உரிய நிதியை விடுவிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர். இருப்பினும் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே தொடரும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிப்படக் கூறி உள்ளார். மும்மொழிக் கொள்கை திணிப்பை பல்வேறு தரப்பினரும் எதிர்த்து வருகின்றனர். அவரவருக்கு விருப்பமிருந்தால் மொழியை கற்றுக் கொள்வார்கள் என்றும் மொழி திணிப்பு கூடாது என்றும் பல கருத்துக்கள் உலவி வருகின்றன.
இதையும் படிங்க: “உன் இந்தியா வேற, என் இந்தியா வேற” - திமுக எம்.பி. கனிமொழி ஆவேசம்...!

தமிழ்நாடு புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் அந்த நிதியை விடுவிக்க முடியாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பதால் ரூ. 2,152 கோடி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடம் இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எடப்பாடி கே. பழனிச்சாமி உள்ளிட்ட பல தலைவர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். மும்மொழி கொள்கை திணிப்பை எதிர்த்து திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மும்மொழிக் கொள்கை திணிப்பை எதிர்த்து அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் அமெரிக்க வாழ் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மொழி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.
இதையும் படிங்க: இருமொழி கொள்கையால் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழக்கின்றனர் - ஆளுநர் ரவி