நடைபெறவிருக்கும் டெல்லி சட்டமன்ற தேர்தல் சுவாரசியங்கள் அரங்கேற தொடங்கி விட்டன. ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கு இடையே சமூக வலைதளங்களில் புதிய மோதல் உருவாகியுள்ளது.
பாஜகவுக்கு 'முதல்வர் முகமில்லை' என ஆம் ஆத்மி கேலி செய்ய, "ஆம் ஆத்மி பேரழிவு" என்று பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
மாப்பிள்ளை இல்லாத 'ஜானவாச குதிரை'
ஆம் ஆத்மி கட்சி அதன் எக்ஸ் சமூக வலை தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஜானவாச குதிரையுடன் மாப்பிள்ளை அழைப்புக்காக அலங்கரிக்கப்பட்ட குதிரை ஒன்றில் மாப்பிள்ளை இல்லாத நிலையில் வலம் வருகிறது.
இதையும் படிங்க: அரவிந்த் கெஜ்ரிவாலுடன் மோதும் பர்வேஷ் வர்மா: ஆம் ஆத்மியை முந்திய பாஜக... வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!
அத்துடன், "பாஜகவினரே, உங்களுடைய மாப்பிள்ளை யார்?" என்றும் கிண்டலாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மியின் இந்த கேலிக்கு பதிலடி கொடுத்த பாஜக, "ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி டெல்லியின் பேரழிவு" என்று பாஜக எதிர்வினை ஆற்றி இருக்கிறது.டெல்லி பாஜகவின் எக்ஸ் தள பக்கத்தில், "ஆம் ஆத்மி கட்சி வெளியேறும், பாஜக ஆட்சிக்கு வரும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் அசோக் விஹாரில் நேற்று மந்திரம் நடந்த பேரணியில் பேசிய பிரதமர் மோடி, "ஆம் ஆத்மி அரசு ஊழலில் திளைப்பதாகவும், அவர்கள் டெல்லியின் பேரழிவாக மாறி விட்டதாகவும்" தாக்குதல் தொடுத்திருந்தார். இது குறித்து அவர் கூறுகையில், "அவர்கள் மதுபானத்தில் ஊழல் செய்தார்கள், பள்ளிகளில், சுற்றுச்சூழல் மாசுவில் ஊழல் செய்தார்கள். அவர்கள் வெளிப்படையாக ஊழல் செய்துவிட்டு அதனை விளம்பரமும் செய்கிறார்கள். டெல்லிக்கு இது பேரழிவாகும். இந்தப் பேரழிவுக்கு எதிராக டெல்லிவாசிகள் போரினை அறிவித்துள்ளனர்" என்று பேசினார்.

பிரதமரின் இந்த குற்றசாட்டுக்கு டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளித்துள்ளார். "டெல்லியில் பேரழிவு இல்லை; அது பாஜக கட்சிக்குள்ளேயே இருக்கிறது. முதல் பேரழிவு அந்தக் கட்சிக்கு "முதல்வர் முகம்" இல்லை, இரண்டாவது அவர்களிடம் சொல்வதற்கு விஷயங்கள் இல்லை. மூன்றாவது டெல்லிக்கான கொள்கைகள் பாஜகவிடம் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தில் பாஜக தோல்வி அடைந்து விட்டதாக குற்றம் சாட்டி இருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டில் டெல்லியில் ஆம் ஆத்மி அரசையும் மத்தியில் பாஜக அரசையும் மக்கள் அமைத்தனர். இப்போது 10 ஆண்டுகள் ஆகிறது. இந்த ஆண்டுகளில் நாங்கள் என்ன சாதித்தோம் என்று நீங்கள் கேட்டீர்கள் என்றால் அதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கூட போதாது" என்றும் பதிலடி கொடுத்திருந்தார்.
டெல்லியின் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆறு மாத சிறைக்குப் பின் கடந்த ஆண்டு செப்டம்பரில் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
அப்போது, "வரவிருக்கும் பேரவைத் தேர்தலில் டெல்லி மக்கள் தனது நேர்மைக்கு நற்சான்று அளிப்பார்கள்" என்றும், "அதன் பின்பே முதல்வர் பதவியில் அமருவேன்" என்றும் அறிவித்தார். அவரைத் தொடர்ந்து, டெல்லியின் அடுத்த முதல்வராக அதிஷி இருந்து வருகிறார்.
70 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட டெல்லி யூனியன் பிரதேசத்தின் தற்போதைய அரசின் பதவி காலம் பிப்ரவரி 23ம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆனால், தேர்தல் ஆணையம் இன்னும் டெல்லி பேரவைக்கு தேர்தல் தேதியினை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
கடந்த 2015, 2020 பேரவைத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி முறையே, 67, 62 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது. பாஜக இரண்டு தேர்தல்களிலும் தலா மூன்று மற்றும் எட்டு என ஒற்றை இலக்கங்களிலேயே வெற்றி பெற்றது.
மேலும் கடந்த 1998ம் ஆண்டு முதல் பாஜக டெல்லியில் ஆட்சியில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்து பெண்கள் மீது குடும்பக் கட்டுப்பாடு திணிப்பு: சர்ச்சை கருத்தை வெளியிட்ட இந்து முன்னணி நிர்வாகி கைது!