தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக, நாதக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய 5 கட்சிகள் புறக்கணித்தன. இந்நிலையில்
தமிழக அனைத்துக் கட்சி கூட்டம் தொடர்பாக திமுக அறிக்கை வெளியிட்டது. அதில், "தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழகத்துக்கு ஏற்படப்போகும் பேராபத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலினால் கூட்டப்பட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த அனைத்துக் கட்சிக் கூட்டமானது தலைமைச்செயலகத்தில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி மதியம் 2.30 வரைக்கும் நடைபெற்றது.
.
63 அரசியல் கட்சிகள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் 58 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி வில்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழகத்துக்கு ஏற்படப்போகும் பேராபத்தை விளக்கமாக எடுத்துரைத்து, பவர்பாய்ன்ட் மூலம் தகவல்களை விளக்கி அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவைக் கோரினார் முதல்வர் ஸ்டாலின். தமிழகத்தின் ஒட்டுமொத்த கூட்டுணர்வை வெளிப்படுத்தும் வகையில் சிறிய கட்சிகள், பெரிய கட்சிகள் என்ற பாகுபாடு இன்றி கலந்துகொண்ட அனைவரின் குரல்களும் தமிழகத்தின் உரிமை காக்க ஒருமித்த கருத்தில் ஒன்றாக ஒலித்தன.
இதையும் படிங்க: தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரம்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்பு கர்ஜித்த கமல்!!
கலந்து கொண்டவர்கள் ஆக்கபூர்வமான கருத்துகளைப் பகிர்ந்ததோடு தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிரான தீர்மானத்துக்கும் தங்களது ஆதரவையும் அளித்தார்கள்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு செய்து, நாடாளுமன்ற அவைகளில் தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க திட்டமிட்டிருந்த பாஜகவின் சதிக்கு எதிராக, இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்ப்பு குரலும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டது. பாஜகவின் கூட்டணிக் கட்சிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானங்கள் அனைத்து கட்சிப் பிரதிநிதிகளால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிரான இந்த எதிர்ப்புக் குரல் திமுகவுடையது மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உரிமைக் குரல் என்பது இன்று ஒன்றிய பாஜக அரசுக்கு உணர்த்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் உரிமைகளைப் பறித்து, தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கத் துடிக்கும் பாஜகவும், அதன் சில ஏஜண்டுகளும் இந்தக் கூட்டத்தை புறக்கணித்தார்கள். அவர்கள் என்றும் தமிழகத்தின் பகைவர்கள்தான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.
தமிழகத்தின் உரிமைகளை காக்க வேண்டும் எனும் ஒற்றை நோக்கத்தோடு கட்சி, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் தமிழகத்தின் ஒற்றுமைக் குரல் ஒலிக்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலினின் நோக்கம் வெற்றியடைந்திருக்கிறது. தமிழகத்தின் உரிமைகளைப் பறித்து, தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கத் துடிக்கும் பாஜகவும், அதன் சில ஏஜண்டுகளும் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்தார்கள். அவர்கள் என்றும் தமிழகத்தின் பகைவர்கள்தான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.

நாட்டின் கூட்டாட்சிக்கும், தமிழகத்தின் உரிமைக்கும் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் ஏற்பட்டிருக்கும் பேராபத்தை எதிர்த்து நின்று இணைந்து போராடி வெற்றி பெற அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தென்னிந்திய மாநில முதல்வர்களை ஒருங்கிணைத்து, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் உரிமை பறிப்பிற்கு எதிரான போராட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்த வேண்டும் என அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கேட்டுக்கொண்டனர். முதல்வரின் தலைமையில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றாய் இணைந்து எழுச்சியுடன் போராடும்; இந்த உரிமைப் போராட்டத்தில் வெல்லும்!" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினுக்கு ஒரே அவசரம்... அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு சீறிய ஜெயக்குமார்...!