முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் இதுவரை முஸ்லம் ஆண்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல்தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை உள்ளிட்ட விவரங்களை மத்திய அரசு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கண்ணா நீதிபதி சஞ்சய் குமார் உத்தரவிட்டனர். முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவியை விவாகரத்து செய்ய மூன்றுமுறை தலாக் செய்து ஒதுக்கி வைக்கும் முறைக்கு கடந்த 2017ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, 2019ம் ஆண்டு முத்தலாக் தடைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது, ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் 3 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கும் வகையில் சட்டம் இயற்றியது.

மத்திய அரசு கொண்டு வந்த முத்தலாக் தடைச் சட்டத்தில் முஸ்லிம் கணவர்களை தண்டிக்கும் நோக்கில் கிரிமினல் பிரிவைச் சேர்த்துள்ளது. இந்தச் சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரி கேரளாவில் உள்ள சமஸ்தா கேரளா ஜமைத்துள் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. சன்னி பிரிவு முஸ்லிம் மற்றும் மதகுருமார்களுக்கான மிகப்பெரிய அமைப்பாக இது செயல்படுகிறது. இது தவிர இந்தச் சட்டத்தை எதிர்த்து ஜமாத் உலமா ஐ ஹிந்த் உள்பட 12 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கண்ணா நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாதர் சார்பில் வழக்கறிஞர் நிஜாம் பாட்ஷாவும், மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் ஆஜராகினர்.

மனுதாரர் வழக்கறிஞர் பாட்ஷா வாதிடுகையில் “ மனைவியிடம் விவாகரத்து என்று பேசினாலே அது குற்றமாக இந்தச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கணவன் மனைவியை கைவிடுவது குற்றமாக இல்லாத நிலையில், முத்தலாக் செய்வது எந்தவிதத்தில் குற்றமாகும். இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளவை அபரிமிதமானவை. முத்தலாக் சட்டம் என்பது, கடத்தல், கொலைமிரட்டல், கலவரத்தை தூண்டுதல், உணவுக் கலப்படம், உடலை ரகசியாக அப்புறப்படுத்துல் உள்ளிட்ட கொடுமையான குற்றங்களைவிட மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
அப்போது தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா “ முத்தலாக் நடைமுறை செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு தண்டனை சட்டம் எதற்கு. ஒருவேளை கணவரும் மனைவரும் சேர்ந்து வாழ்ந்தால் கிரிமினல் குற்றமாக்கி என்ன செய்ய முடியும்” எனக் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: சட்டப்பேரவையில் 23ஆம் புலிகேசி படம்..வடிவேலுவாக செல்வப்பெருந்தகை..பாஜக அண்ணாமலை நக்கல் ..!

அப்போது மனுதாரர் வழக்கறிஞர் பாட்ஷா “ விவகாரத்து என்றால் கூட அதை அச்சறுத்தலாக எடுத்து தண்டிக்க சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா “ முத்தலாக் தடைச் சட்டம் கொண்டு வந்ததன் நோக்கமே முஸ்லிம் பெண்களை பாதுகாக்கத்தான். குறைந்தபட்ச பாதுகாப்பு பெண்களுக்கு தேவை. முஸ்லிம் கணவர் மனைவியைப் பார்த்து தலாக் என்று சொல்லிவிட்டால் உடனே அவர் மனைவி அந்தஸ்தை இழந்துவிடுவார், வீட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்” எனத் தெரிவித்தார்
இதைக் கேட்ட தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு “ 2019ம் ஆண்டு முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் முஸ்லிம் ஆண்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முதல்தகவல் அறிக்கைகள், குற்றப்பத்திரிகைகள் ஆகியவற்றை மத்திய அரசு சேகரித்து எங்களுக்குத் தர வேண்டும்” என உத்தரவிட்டனர். இந்த வழக்கை மார்ச் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆளுநர் கேஷுவல் லேபர் மட்டுமே..திமுக ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு!