பட்ஜெட்டில் வரித் தீவிரவாதத்தையும், வரிக் கொள்ளையையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மத்திய அரசு நடைமுறைப்படுத்திய ஜிஎஸ்டி வரியை, “கப்பார் சிங் வரி” என்றும், “ கிவ் சீதாராமன் டேக்ஸ்(சீதாராமனுக்கு வரி கொடுங்க)” என்றும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரி மிகுந்த குழப்பமாகவும், அபத்தமாகவும் இருக்கிறது, வரி முறையை எளிமைப்படுத்த கொண்டுவரப்பட்ட வரியில் தற்போது 9 வகையான வரிகள் உள்ளன. இது சரியான வரி அல்ல(குட் அன்ட் சிம்பிள் டேக்ஸ்) பாஜக கொண்டுவந்த ஜிஎஸ்டி வரியை எந்த பெயர் கொண்டும் அழைக்கலாம். “கப்பார் சிங் டேக்ஸ்”, அல்லது “ஹவுஸ்போல்ட் டிஸ்ட்ரக்ஸன் டேக்ஸ்”(குடும்பங்களை அழிக்கும் வரி), அல்லது “ கிவ் சீதாராமன் டேக்ஸ்(சீதாராமனுக்கு வரி கொடுங்க)” என்றும் அழைக்கலாம்.
இதையும் படிங்க: புதிய சி.பி.ஐ ஊழல் வழக்கில் சிக்கிய கார்த்தி சிதம்பரம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஜிஎஸ்டி வரி என்பதை, ஏழை, நடுத்தர குடும்பத்து மக்கள் கடினப்பட்டு உழைத்துச் சேர்த்துப் பணத்தைக் கொள்ளையடிக்க உருவாக்கியுள்ளது. வரும் பட்ஜெட்டில் வரித் தீவிரவாதத்தையும், வரிக் கொள்ளையையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
ஏற்கெனவே அதிகமான வரியால் மக்கள் அல்லாடி வரும்போது, ஜிஎஸ்டி வரி வசூல் உயர்ந்துள்ளது, மாதம் தோறும் அதிகரித்து வருகிறது எனக் கூறி காயம்பட்ட புண்ணில் உப்பைத் தடவி மோடி அரசு ரசிக்கிறது.
ஜிஎஸ்டி வரி வசூலில் மூன்றில் இரு பங்கு ஏழை மக்கள், நடுத்தர மக்களின் பாக்கெட், சேமிப்பிலிருந்து வருகிறது. அதாவது 64 சதவீதம் வரி சாமானியர்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. நாட்டின் கோடீஸ்வரர்களிடம் இருந்து வெறும் 3 சதவீத ஜிஎஸ்டி வரி மட்டுமே வசூலிக்கப்படுகிறது. கார்ப்பரேட் வரி 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக மோடி அரசு குறைத்துவிட்டது.
36 வகையான வேளாண் பொருட்கள் மீது மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை முதல்முறையாக விதித்துள்ளது. மக்கள் தங்கள் வாழ்வுக்கான காப்பீடு, எல்ஐடி, உடல்நலக் காப்பீடுக்குகூட 18சதவீதம் வரியை மத்திய அரசு விதித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் வருமானவரி வசூல் 240 சதவீதமும், ஜிஎஸ்டி வரி வசூல் 177 சதவீதமும் அதிகரித்துள்ளது. வரும் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யும் பொது பட்ஜெட்டில் வரி தீவிரவாதத்தையும், மக்களிடம் இருந்து கொள்ளையடிப்பதையும் நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்
மக்கள், வர்த்தகர்கள் ஜிஎஸ்டி வரியால் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து தெரிவிக்க 12 நகரங்களில் செய்தித்தொடர்பார்களைக் கொண்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கம் அளிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

இதன்படி, காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா ஜெய்ப்பூர் நகரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் “ பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய கோழை. ஜிஎஸ்டி வரி அல்ல, கப்பார் சீதாராமன் வரி” எனத் தெரிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் பேசுகையில் “ காங்கிரஸ் ஆட்சியில்தான் ஜிஎஸ்டி வரித் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் நோக்கம் வரி முறையை எளிமைப்படுத்தி, பரவலாக்குவதுதான் ஆனால் இந்த வரியால் சிலரின் வருவாய் மட்டும் உயர்ந்துவிட்டது. நடுத்தர மக்களுக்கோ, ஏழை மக்களுக்கோ எந்த விடுதலையும் இல்லை.
நாட்டில் 5 சதவீதம மக்கள்தான் வருமானவரி செலுத்துகிறார்கள், மற்ற மக்கள் அனைவரும், ஜிஎஸ்டி வரி செலுத்துகிறார்கள். 64 சதவீத ஜிஎஸ்டி வரி வசூல் அடித்தட்டு மக்களிடம் இருந்து வருகிறது, 10 சதவீத மக்களிடம் இருந்துதான் 3 சதவீத வரி கிடைக்கிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியா கூட்டணிக்கு "அடிமேல் அடி": டெல்லி தேர்தலில் தனித்து விடப்பட்ட காங்கிரஸ்; அகிலேஷ் யாதவுடன் மம்தாவும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு