98வது அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளனத்தின் தொடக்க விழா டெல்லியில் இன்று நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார் ஆகியோர் வந்திருந்தனர்.
பிரதமர் மோடிக்கும் சரத் பவாருக்கும், அருகருகே இருக்கைகள் போடப்பட்டு இருந்தது. வயது முதிர்வின் காரணமாக சரத் பவார் சற்று தட்டு தடுமாறி வந்த நிலையில், அவருக்கு உதவும் வகையில் சரத் பவாரின் நாற்காலியை கையில் பிடித்து அவர் அமரும் வரை மோடி நின்று கொண்டே இருந்தார். பின்னர் இருக்கையில் அமர்ந்த பின்னர் அங்கிருந்த பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து அருகே இருந்த டம்ளரில் ஊற்றி கொடுத்தார். சரத் பவாரும் போதும் என தலையை அசைத்து கையை ஆட்டி மோடிக்கு சைகை செய்தார். மோடியின் இந்த செயலைப் பார்த்து அங்கிருந்த மராட்டிய மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

பின்னர் அங்கு குழுமியிருந்த மராட்டிய மக்களிடையே பேசிய பிரதமர் நரேந்திர மோடி " மகாராஷ்டிரா மண்ணில், ஒரு சிறந்த மராத்தி பேசும் மனிதர் 100 ஆண்டுகளுக்கு முன்பு ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் விதைகளை விதைத்தார் என்பதில் நாம் பெருமைப்படுவோம். இன்று அது ஒரு ஆலமரத்தின் வடிவத்தில் அதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது... லட்சக்கணக்கில் மற்றவர்களைப் போலவே, ஆர்எஸ்எஸ் என்னை தேசத்திற்காக வாழ ஊக்கப்படுத்தியதில் நான் அதிர்ஷ்டசாலி என்று கருதுகிறேன்.
இதையும் படிங்க: டெல்லி முதல்வரானார் ரேகா குப்தா..! 6 கேபினட் அமைச்சர்களும் பதவியேற்பு..!

இந்த காலகட்டத்தில், சில மாதங்களுக்கு முன்பு, மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்தியாவிலும் உலகிலும் 120 மில்லியனுக்கும் அதிகமான மராத்தி மொழி பேசும் மக்கள் உள்ளனர். லட்சக்கணக்கான மராத்தி மொழி பேசுபவர்கள் இந்த அங்கீகாரத்தைப் பெறுவதற்காக பல தசாப்தங்களாகக் காத்திருந்தனர். இந்தப் பணியை நிறைவேற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது, அதை என் வாழ்க்கையின் ஒரு பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன் என்றும் மோடி உணர்ச்சி பூர்வமாக பேசினார்.

மேலும் பேசிய அவர் டெல்லி மண்ணில், மராத்தி மொழியின் இந்த மதிப்புமிக்க நிகழ்வு நடைபெறுகிறது. அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளனம் ஒரு மொழி அல்லது ஒரு மாநிலத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. மராத்தி சாகித்ய சம்மேளனம் சுதந்திரப் போராட்டத்தின் சாராம்சத்தைக் கொண்டுள்ளது. 1878 ஆம் ஆண்டு அதன் முதல் நிகழ்விலிருந்து, அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளனம் நாட்டின் 147 ஆண்டுகால பயணத்திற்கு ஒரு சாட்சியாக இருந்து வருகிறது. என விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி மராத்தி மொழி பற்றியும் மராட்டிய மாநில பெருமைகளையும் பேசினார். அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும் மொழி கலாச்சாரம் என வரும்போது பிரதமர் மோடியும் சரத் பவாரும் ஒற்றுமையாக அமர்ந்து நட்போடு காணப்பட்டது அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.
இதையும் படிங்க: கல்வி நிதியை தராவிட்டால் கெட் அவுட் மோடிதான்... மத்திய அரசை எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்.!