புதுச்சேரி தவளக்குப்பம் தானாம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் அறிவியல் பிரிவு ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் மணிகண்டன். இவர் அதே பள்ளியில் 1 ஆம் வகுப்பு படிக்கும் 6 வயது மாணவி ஒருவருக்கு கடந்த 4 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் உடல்நலன் மோசமானதை தொடர்ந்து பெற்றோர் சிறுமியிடம் விசாரிக்கையில் தனக்கு இழைக்கப்பட்ட கொடூரம் குறித்து சிறுமி தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட ஆசிரியர் மணிகண்டனை விசாரணைக்காக பள்ளியில் இருந்து போலீசார் காவல் நிலையம் அழைத்து செல்ல முயன்ற போது ஆசிரியரை பொதுமக்களும், உறவினர்களும் தாக்கினர். சம்பந்தப்பட்ட பள்ளியில் மேஜை, கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் உடைத்து சூரையாடினர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது. இந்நிலையில் இதுகுறித்து சர்ச்சையான பதிவுகளை யூ- டியூபர் கார்த்திக் பிள்ளை வெளியிட்டார்.
இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் கூட்டணி டமால்..? இரு கட்சித் தலைவர்களிடையே அதிகரிக்கும் புகைச்சல்!
இரு தினங்களுக்கு முன் சென்னை குன்றத்துார், மணிகண்டன் நகரைச் சேர்ந்த 39 வயதான பிரபல யூ-டியூபர் கார்த்திக் பிள்ளை, வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், பாதிக்கப்பட்ட சிறுமியை அரசியல் தலைவர்கள் பார்த்து ஆறுதல் கூறி அரசியல் செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவருக்கு, ஒரு கோடி பணம் வேண்டும் என்றும் டிமாண்ட் செய்கின்றனர். உழைக்காமல் பணம் வரவேண்டும் என்றால் இது எந்த விதத்தில் நியாயம். சிறுமிக்கு கடலுாரில் நடந்த மருத்துவ பரிசோதனை ரிப்போர்ட் பொய்யானது. ஜிப்மரில் நடந்த சிறுமியின் மருத்துவ பரிசோதனை ரிப்போர்ட்டில் ஒன்றுமே இல்லை என்று தெரிவித்தார்.

மேலும், கைது செய்யப்பட்ட ஆசிரியர் மணிகண்டனை போலீசார் சரியாக விசாரிக்கவில்லை. சிறுமி சொல்வதை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வழக்கை, முதல்வர் மற்றும் டி.ஜி.பி., விசாரித்து, உண்மை குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து சிறுமி பாலியல் விவகாரம் தொடர்பாக, தவறான செய்தி வெளியிட்ட யூ-டியூபர் கார்த்திக்பிள்ளை மீது இரு பிரிவினரிடையே மோதல் உருவாக்குதல் (பி.என்.எஸ்.196) மற்றும் போக்சோ 23 ஆகிய பிரிவுகளில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இந்த கார்த்திக்பிள்ளை மீது கணியாமூர் பள்ளி மாணவியின் மரண வழக்கில் தங்களை குறித்து அவதூறாக பேசியதாக மாணவியின் பெற்றோர் ஏற்கனவே புகார் அளித்திருந்தனர். கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரில், The K tv எனும் பெயரில் யூ-ட்யூப் சேனல் நடத்தி வரும் கார்த்திக் பிள்ளை என்பவர், தனது யூ-ட்யூப் சேனலில் தனது மகள் குறித்தும், தன்னைப்பற்றியும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருவதாக குறிப்பிட்டுள்ளார். பள்ளி நிர்வாகத்திடம் இருந்து ஆதாயம் பெற்றுக்கொண்டு தன்னைப்பற்றி அபாண்டமாகப்பேசி வரும் கார்த்திக், கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தையை நான் கொலை செய்திருக்கலாம் என்றும் பேசும் வீடியோவால் மகளை இழந்து வாடும் தங்களுக்கு மன உளைச்சலாக உள்ளதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பலருக்கு விற்கப்பட்ட +1 மாணவி... கொடூரர்கள் கையில் விலங்கு மாட்டிய போலீஸ்... சிக்கியது எப்படி?