டாஸ்மாக்கில் 1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. மதுபான கொள்முதல் மூலம் தனியார் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாகவும், திட்டமிட்டு செலவுகளை அதிகப்படுத்தியும், விற்பனை புள்ளி விவரங்களை உயர்த்தியும் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு:
டாஸ்மாக் கொள்முதலில் முறைகேடு நடந்திருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிரடி ரெய்டை நடத்தியது. முதலில் கரூரை மையப்படுத்தி அமலாக்கத்துறை களமிறங்கியதும் பழைய மோசடி வழக்கின் தொடர்ச்சியாகத்தான் சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால், திடீர் ட்விஸ்ட்டாக சென்னையில் டாஸ்மாக் நிறுவன தலைமை நிறுவனத்திற்குள் புகுந்து சோதனை நடத்தியபோது தான் வேறொரு வழக்கு என்பது தெரிய வந்தது.

சென்னை, எழும்பூரில் டாஸ்மாக் தலைமையகம் தொடங்கி, டாஸ்மாக் நிறுவனத்திற்கு மது விற்பனை செய்யப்படும் நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை ரெய்டு விரிவடைந்தது. அம்பத்தூரில் உள்ள அரசு மதுபான குடோனிலும் சோதனை நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் மதுபானங்கள் எங்கிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது, எங்கு அனுப்பி வைக்கப்படுகிறது? அதன் கணக்கு, வழக்குகள் என்ன என்ற விவரங்களை ஆய்வு செய்தது.

அந்த வகையில் தியாகராய நகரில் இயங்கி வரும் திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான அக்கார்டு டிஸ்டிலரீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், ஆர்.வாசுதேவன் என்ற சிவப்பிரகாசம் என்பவர் நடத்திவரும் கால்ஸ் நிறுவனம், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஜெயமுருகன் நடத்தி வரும் எஸ்.என்.ஜே நிறுவனங்களில் சோதனை நடைபெற்றது.
அதாவது டாஸ்மார்க் நிறுவனம் கொள்முதல் செய்யும் மதுபானங்கள் பெரும்பாலும் இந்த மூன்று நிறுவனங்களில் இருந்துதான் அதிகமாக கொள்முதல் செய்யப்படுகிறது. திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான உற்பத்தி நிறுவனமான அக்கார்டு நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
சர்ச்சையைக் கிளப்பிய கொள்முதல் தகவல்கள்:
48 குவாட்டர் பாட்டில்கள் அடங்கிய கேஸ் ஒன்றுக்கு 75 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை உற்பத்தி நிறுவனங்கள் டாஸ்மாக்கிற்கு கமிஷனாக கொடுப்பதாக சொல்லப்படுகிறது. டாஸ்மாக் கமிஷனாக கொடுத்து மதுபான உற்பத்தி நிறுவனங்கள் அதிகளவு மதுபானங்களை விற்று, கோடிக்கணக்கில் லாபம் பார்ப்பதாகவும் சொல்லப்படுகிறது. ரெய்டு நடவடிக்கையில் சிக்கிய எஸ்.என்.ஜே நிறுவனம் டாஸ்மார்க் நிறுவனத்திற்கு 10 லட்சம் கேஸ் பெட்டிகளை விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில் ஒவ்வொரு கேஸ் பெட்டிக்கும் 100 ரூபாய் வரை கமிஷன் என கோடிக்கணக்கில் கொடுக்கப்படுவதாக பகீர் கிளப்பப்பட்டது.
இதே போல திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் நடத்திவரும் அக்கார்டு பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 6 லட்சம் கேஸ் பெட்டிகளை டாஸ்மாக்கிற்கு விற்பனை செய்கிறது என்கிற நிலையில் ஒவ்வொரு கேஸ் பெட்டிக்கும் கமிஷன் கொடுக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் நடத்தப்பட்டு வரும் சோதனையில் கைப்பற்றிய ஆவணங்கள் முன்னுக்குப் பின் முரணாகவும், குளறுபடியாகவும் இருப்பது அமலாக்கத்துறைக்கு இன்னும் சந்தேகம் வலுத்துள்ளது. கமிஷன்களைப் பெற்றுக் கொடுக்கும் புரோக்கர் போல எஸ்.என்.ஜெ நிறுவனம் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.
ரூ. 1000 கோடி ஊழல்:

தற்போது டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் நடந்த சோதனைகளில் 1000 கோடி ரூபாய் கணக்கில் வராதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், டாஸ்மாக் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மோசடியில் ஈடுபட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், மதுபாட்டில்களின் எம்ஆர்பி விலையை அதிகரித்து வைத்து விற்பது, சில்லறை விற்பனை நிலையங்களில் இருந்து லஞ்சம் வசூலிக்க டாஸ்மாக் பணியாளர்களை பணியமர்த்துவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை விளக்கியுள்ளது.
இந்த ஊழலில் மதுபானம் மற்றும் பாட்டில் தயாரிப்பு நிறுவனங்கள் பெரும் பங்காற்றியுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட டாஸ்மாக், டிஸ்டில்லரி மற்றும் பாட்டில் தயாரிப்பு நிறுவனங்களுடன் தொடர்புடைய ஊழியர்கள், பங்குதாரர்கள்,மற்றும் டாஸ்மாக் தொடர்பான சட்டவிரோத விவகாரங்களில் பிற முக்கிய பங்குதாரர்களுக்கு இந்த முறைகேட்டில் என்ன தொடர்பு உள்ளது என ஆராயப்பட்டு வருவதாகவும் அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.